×

உலகப்புகழ் பெற்ற மாமல்லபுரத்தில் போதிய அளவு பார்க்கிங் வசதியின்றி சுற்றுலா பயணிகள் கடும் அவதி: சீசன் தொடங்கும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

மாமல்லபுரம், ஜூன் 26: மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் போதிய அளவு பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, விசாலமான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும், என சுற்றுலா வழிகாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகப்புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை அழுகுற செதுக்கினர். இந்த சிற்பங்களை சுற்றிப் பார்க்க ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என லட்சகணக்கானோர் வந்து செல்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பலர் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள், பழங்கால கோயில்கள், பாரம்பரிய நினைவு சின்னங்கள், மன்னர்களின் வரலாற்று தகவல்கள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சின்னங்களை பார்வையிட்டு, அதனை செதுக்கிய மன்னர்களின் வரலாறுகளை தெரிந்துகொள்ள ஆண்களை விட பெண் பயணிகளே அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு மாமல்லபுரம் வரும் வெளிநாட்டினர் சென்னையில் இருந்து சொகுசு பேருந்துகள், மினி வேன் மற்றும் கார்களில் வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழலை பராமரிப்பது அவசியமாக உள்ளது.

ஆண்டுதோறும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு தடையின்றி போதிய வருவாய் கிடைக்கிறது. சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும், பொங்கல், தீபாவாளி உள்ளிட்ட சிறப்பு விடுமுறை நாட்களிலும் உள்நாட்டு பயணிகள் ஏராளமானோர் கார்களில் மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர். அவ்வாறு, வருபவர்கள் வாகனங்களை இடையூறு இன்றி நிறுத்துவதற்கு போதிய அளவு பார்க்கிங் வசதி இல்லாததால், சாலையை மறித்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மற்ற சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், சிலர் வீடுகளுக்கு முன்பு கார்களை நிறுத்திவிட்டு செல்வதால், உள்ளூர் மக்கள் தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். வரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 6 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த மாதங்களில் ஏராளமான வெளிநாட்டினர் சொகுசு பேருந்து மற்றும் கார்களில் வருவார்கள். மாமல்லபுரத்தில் வாகனங்களை நிறுத்த புதுநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 2 பார்க்கிங், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 பார்க்கிங் என 4 பார்க்கிங்கிலும் குறைந்த அளவு வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். இதில், ஒரு பார்க்கிங்கில் மட்டும் வாகன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு தொல்லியல் துறை, சுற்றுலா துறை, நகராட்சி நிர்வாகம், சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து வாகனங்களை இடையூறு இன்றி நிறுத்தும் வகையில், விசாலமான பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும், என சுற்றுலா வழிகாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகையில், `மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்கென அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விசாலமான வாகன நிறுத்தம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாமல்லபுரம் நகருக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் காருக்கு ரூ.75, வேனுக்கு ரூ.100, பேருந்துக்கு ரூ.125 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. எனவே, விசாலமான வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

நவீன பார்க்கிங் வசதி
மாமல்லபுரத்தில் ஒரே நேரத்தில் 1000 சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார்
வார இறுதி நாட்களான சனி – ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாமல்லபுரத்திற்கு ஏராளமான உள்நாட்டு பயணிகள் கார்களில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் சாலையை மறித்து கார்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி விடுகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கூடுதல் டிராபிக் போலீசாரை நியமிக்க உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

100 வாகனங்கள் நிறுத்தும் அவலநிலை
மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த 4 பார்க்கிங் மட்டுமே உள்ளது. இந்த 4 பார்க்கிங்கிலும் 100 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடிகிறது. இதனால் மற்ற வாகனங்கள் சாலையை மறித்து நிறுத்தப்படுகிறது.

 

Tags : Mamallapuram ,
× RELATED தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் மூலம்...