×

ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ நிலையத்தில் தண்டவாளத்தில் குதித்து பயணி தற்கொலை முயற்சி

 

மாங்காடு, ஜூன் 25: ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ஊழியர்களின் துரித நடவடிக்கையால் அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு பிரதான வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான நீல வழித்தடம் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையிலான பச்சை வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயங்குகிறது. இந்த இரண்டு வழித்தடங்களும் ஆலந்தூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய இரண்டு முக்கிய நிலையங்களில் ஒன்றையொன்று சந்திக்கின்றன. மேலும், இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலான பச்சை வழித்தடம் ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்கிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் வரும் நேரத்தில் நேற்று பயணி ஒருவர் திடீரென தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், ‘நேற்று பிற்பகல் 1.34 மணியளவில் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் திடீரென தண்டவாளத்தில் குதித்தார்.
அந்த நேரத்தில் மெட்ரோ ரயில் ஒன்று நிலையத்துக்குள் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அவசரகால பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன. தண்டவாளத்தில் இருந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவருக்கு ரயில் நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் பச்சை வழித்தடத்தில் சுமார் 10 நிமிடங்கள் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

Tags : Eekattuthangal Metro station ,Mangadu ,Metro ,
× RELATED திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 16...