நடிகையுடன் 11 வயது மகளையும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ: நடிகரின் மேனேஜர் மீது புகார்

 

 

லக்னோ: போஜ்புரி திரைப்பட நடிகை அஞ்சனா சிங், அவரது 11 வயது மகளையும் ஆபாசமாக சித்தரித்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இது குறித்து அஞ்சனா சிங் அளித்த பேட்டியில், கடந்த சில நாட்களாக தன்னையும் தனது மகளையும் அவதூறாக சித்தரிக்கும் ஏஐ உருவாக்கிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருவதாக தெரிவித்தார்.

மேலும், அந்த பதிவுகளுடன் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதோடு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இது குறித்து தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘லக்னோவுக்கு வரக்கூடாது என்று எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போஜ்புரி நடிகரும் பாடகருமான கேசரி லால் யாதவின் மேலாளர் அகிலேஷ் காஷ்யப் என்னை குறிவைத்து இந்த செயல்களை செய்து வருகிறார்.

அவருடைய குழுவினர் என்னையும் என் 11 வயது மகளையும் பற்றி அவதூறாக பாடல்களையும் உருவாக்கியுள்ளனர். இது குறித்து போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளேன்’’ என்றார். இந்த புகார் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் சைபர் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேசரி லால் யாதவ் அல்லது அவரது தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை.

Related Stories: