×

விமர்சனம்: டார்க்

தனது மகள் அஞ்சனா முருகனுடன் கே.பாக்யராஜ் வசிக்கும் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக கொன்று, தானும் தற்கொலை செய்துகொள்கிறார். இதனால் பயந்து அங்கு குடியிருக்க யாரும் வராத நிலையில், அந்த உண்மை தெரிந்தும் துணிச்சலாக வாடகைக்கு குடியேறுகிறார், அஜய் கார்த்தி. தினமும் அவரை அமானுஷ்ய சம்பவங்கள் மிரட்டுகிறது. தன்னைத்தானே தாக்கியபடி இறந்துவிடுகிறார்.

பாக்யராஜும் இறந்து கிடக்கிறார். இதுகுறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரி நட்டியை, திடீரென்று எழுந்த அஜய் கார்த்தி கடுமையாக எச்சரித்துவிட்டு மயக்கம் அடைகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, தீவிர விசாரணையை தொடங்கும்போது திடுக்கிடும் பல உண்மைகள் தெரியவருகிறது. அது என்ன என்பது கிளைமாக்ஸ்.

அமானுஷ்ய சம்பவங்களை எதிர்கொள்ளும் அஜய் கார்த்தி, ஆழ்மன பாதிப்புகளை அழுத்தமாக வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நட்டியின் விசாரணை துரிதமாக நடக்கிறது. வீட்டு உரிமையாளர் கே.பாக்யராஜ், தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். அஞ்சனா முருகன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்ரவர்த்தி, சாகுல் ஆகியோர், இயல்பான நடிப்பின் மூலம் கவனிக்க வைக்கின்றனர்.

ஹாரர் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லருக்கான ஒளிப்பதிவை ரவி சக்தியின் கேமரா வழங்கியுள்ளது. மனு ரமேசன் பின்னணி இசை பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கதிரேஷ் அழகேசன் எடிட்டிங் கச்சிதமாக இருக்கிறது. எழுதி இயக்கிய கல்யாண் கே.ஜெகன், உளவியல் ரீதியான பாதிப்புகளை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார். பேய் இல்லாத பேய் படத்தை கொடுத்துள்ளார். ஆனால் மீண்டும், மீண்டும் அமானுஷ்ய காட்சிகள் வருவதை தவிர்த்து இருக்கலாம்.

Tags : K. Bhagyaraj ,Anjana Murugan ,Ajay Karthi ,Bhagyaraj ,Natty ,
× RELATED பவனுடன் நடிக்க மறுத்த பூஜா ஹெக்டே