ஜனவரி முதல் ஜூன் வரை 124 தமிழ் படங்கள் ரிலீஸ் 12 தான் ஹிட்: ரூ.50 கோடி நஷ்டம்

 

சென்னை: 2026ம் ஆண்டின் இந்த 6 மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு சறுக்கலாகவே இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை தமிழில் 124 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் 6 திரைப்படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தது. 1 படம் மட்டும் (சூர்யா நடித்த கருப்பு) பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. கடந்த ஆண்டு 2025ல் ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை 128 படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு 4 படங்கள் குறைவாக வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான 124 படங்களின் மூலம் ரூ.1070 கோடி முதலீடு செய்யப்பட்டு ரூ.1,120 கோடி வருமானம் பெற்றுள்ளது தமிழ் சினிமா. இந்த ரூ.1120 கோடியில் நிகர வருவாய் ரூ.1020 கோடியாக உள்ளது. ஆகையால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதலீட்டுடன் ஒப்பிடும்போது, ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே 6 மாதத்தில் தமிழ் சினிமாவின் மொத்த முதலீடு ரூ.1875 கோடியாகவும், அதன்மூலம் பெற்ற நிகர வருமானம் ரூ.1625 கோடியாகவும் இருந்தது. அதில் ரூ.250 கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடும், வருமானமும் குறைந்ததற்கு ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமத்திற்கான சந்தை மதிப்பு குறைந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2025ம் ஆண்டு இதே 6 மாத காலத்தில் தமிழ் சினிமா ரூ.250 கோடி நஷ்டத்தை சந்தித்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.50 கோடியாக குறைந்துள்ளது கொஞ்சம் ஆறுதல் தரும் விஷயமாகும். அதற்கு காரணம், இந்த ஆண்டு முதல் பாதியிலேயே 6 படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டானது தான்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போதும், ‘‘கடந்த 6 மாதத்தில் வெளியான 124 படங்களில் ‘பராசக்தி’, ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘வித் லவ்’, ‘தாய் கிழவி’, ‘யூத்’, ‘ஹாப்பி ராஜ்’, ‘கருப்பு’, ‘பிளாஸ்ட்’, ‘ஹாட் ஸ்பாட் 2’, ‘பரிமளா அண்ட் கோ’, ‘டபுள் ஆக்குபன்ஸி’, ‘கான் சிட்டி’ ஆகிய 12 படங்கள் மட்டுமே லாபகரமான வருமானத்தை பெற்று வெற்றிப்படங்களாக அமைந்தன. அவற்றில் குறிப்பாக ‘கருப்பு’, ‘தாய் கிழவி’, ‘யூத்’, ‘பிளாஸ்ட்’, ‘வித் லவ்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஆகிய 6 படங்கள் மிகப்பெரிய லாபத்தை கொடுத்த பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன’’ என்றார்.

124 படங்களில் 95 படங்கள் (77% படங்கள்) மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் (5 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில்) விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. அந்த 95 படங்களில் குறிப்பாக ‘ஹாட் ஸ்பாட் 2’, ‘நீளிரா’, ‘கார்மேனி செல்வம்’, ‘ஹபீபி’, ‘சல்லியர்கள்’ ஆகிய 5 படங்கள் மட்டும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் மீதமுள்ள 90 படங்கள் சுமாரான வரவேற்பையும் பெற்றன. ‘பராசக்தி’ மற்றும் ‘கருப்பு’ ஆகிய 2 படங்கள் மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றது.

அதேபோல ‘வா வாத்தியார்’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘கர’ ஆகிய படங்கள் 50 முதல் 100 கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் உருவாகி, தோல்வியை தழுவின. மீதமுள்ள 119 படங்களும் ரூ.50 கோடிக்கும் குறைவான வருமானத்தை பெற்றன. 124 படங்களில் 78 படங்கள் (63% படங்கள்) ரூ.3 கோடிக்கும் குறைவான வசூலையே பெற்றன. அடுத்து வரும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான 6 மாதத்தில் ‘ஜெயிலர் 2’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘சர்தார் 2’, ‘டிமான்ட்டி காலனி 3‘, ‘ஓம்’, ‘அரசன்’, ‘மண்டாடி’ உள்பட பல பெரிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த ஆண்டின் 2ம் பாதி சினிமா வர்த்தக நிபுணர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: