வருசநாடு, ஆக. 4: வருசநாடு அருகே மொட்டப்பாறை மலைப்பகுதியில் திடீரென பற்றிய காட்டுத்தீயால் மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்திற்கு செல்லும் மலையடிவாரத்தில், திடீரென நேற்று மாலை காட்டுத்தீ உருவானது. இதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. இந்த தீ வெகு வேகமாக கீழிருந்து மேல் நோக்கி பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறு மரங்கள் மற்றும் புல்வெளிகள் மளமளவென தீப்பற்றி எரிகிறது.
இந்த மலைப்பகுதியை தொடர்ந்து, அடுக்கடுக்காக மலைத்தொடர்கள் இருப்பதால், வேகமாக பரவும் காட்டுத்தீயை விரைவாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இப்பகுதியில் இருக்கும் பசுமை நிறைந்த மற்றும் மழையின்றி காய்ந்த மரங்கள், செடிகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகலறிந்த கண்டமனூர் வனத்துறையினர், 10க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி ஓரளவு தீ அணைக்கப்பட்ட நிலையில், விரைவில் பிரச்னை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் என, அவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா அல்லது வெயில் மற்றும் காற்றின் உராய்வு மூலம் தீப்பற்றியதா என, வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
