×

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சுகவனேஸ்வரர், கோட்டை மாரியம்மன் முனியப்பன் கோயில்களில் சிறப்புவழிபாடு

 

சேலம், ஆக.4: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சுகவனேஸ்வரர், கோட்டை மாரியம்மன், முனியப்பன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆடிப்பண்டிகை கடந்த வாரம் பூச்சாட்டுதலோடு தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனையோடு வழிபாடு நடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். ஆடிப்பெருக்கு விழாவான நேற்று, கோட்டை மாரியம்மனுக்கு காலையில் வாசணை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, சிம்மவாகனத்தில் துர்க்கையம்மன் அலங்காரம் செய்தனர். மாநகர் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். கோயில் பிரகாரத்தில் உருளுதண்டம் போட்டு வேண்டுதல்களை ஆண், பெண் பக்தர்கள் நிறைவேற்றினர். தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கினர். ஆடிப்பண்டிகையின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நாளை (5ம் தேதி) நடக்கிறது.

இதேபோல், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பட்டக்கோயில் சின்னமாரியம்மன் கோயிலில் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு மாரியம்மன் அருள் பாலித்தார். அம்மாபேட்டை காளியம்மன், செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டறை மாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன், குமாரசாமிபட்டி எல்லைப்பிடாரியம்மன் என மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர். சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை முதலே பக்தர்கள் அதிகளவு வந்திருந்து, சிவனை தரிசித்தனர். இதேபோல், சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் அழகிரிநாதர், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கையொட்டி அய்யந்திருமாளிகை பூட்டு முனியப்பன் கோயிலில் நேற்று, முனியப்பனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்து மாமிச படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள், ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். குரங்குச்சாவடி வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, ஆடி, கோழி பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

கோட்டை மாரியம்மனுக்கு அழகிரிநாதர் சீர்வரிசை
ஆடிப்பண்டிகையையொட்டி, அண்ணனான கோட்டை பெருமாளிடம் சீர்வரிசை பெறுவதற்காக கோட்டை மாரியம்மன் ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். கோட்டை பெருமாள் கோயிலில் அழகிரிநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோட்டை மாரியம்மனுக்கான பட்டுச்சேலைகள், வளையல், பூக்கள், பழங்கள், திருமாங்கல்யம் உள்ளிட்ட சீர்வரிசை வகைகளை எடுத்துக்கொண்டு, மீண்டும் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலம் புறப்பட்டது. கோயிலை சென்றடைந்ததும், அழகிரிநாதரின் சீர்வரிசையுடன் மாரியம்மனுக்கு சாத்துப்படி செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இந்த சீர்கொண்டு செல்லும் ஊர்வலத்தில், கோட்டை அழகிரிநாதர் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடேஸ்வரி சரவணன், செயல் அலுவலர் அனிதா, கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அறங்காவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Sugavaneswarar ,Kottayam Mariamman ,Muniyappan ,Aadiperukku festival ,Salem ,Aadipandi festival ,Kottayam ,Mariamman ,temple ,
× RELATED டூவீலர் திருடிய ெதாழிலாளி கைது