×

தேனி அருகே முல்லைப் பெரியாற்றங்கரையில் உற்சாக ஆடிப்பெருக்கு விழா: புதுமணத் தம்பதிகள், பெண்கள் திரண்டனர்

 

தேனி, ஆக. 4: தேனி, வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதியில் நேற்று ஆடிப்பெருக்கு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கு நாளில் எந்தவொரு சுப காரியத்தைத் தொடங்கினாலும், மென்மேலும் பெருகும் என்பது தமிழக மக்களின் நம்பிக்கை. இதனால், விவசாயம் செழிக்கவும், வீட்டில் வளம் பெருகவும் முல்லைப் பெரியாற்றை வணங்கி வரவேற்கும் விதமாக, நேற்றைய ஆடிப்பெருக்கு திருநாளை பலரும் திருவிழா போல் கொண்டாடினர். இதன்படி தேனி வீரபாண்டி முல்லைப் பெரியாற்றங்கரையில் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம், குடும்பமாக திரளத் தொடங்கினர்.

இவர்களின் ஒரு பகுதியாக, ஏராளமான புதுமணத் தம்பதியர் ஆற்றங்கரையில் ஒன்றுகூடி, தங்களது சுமங்கலி பாக்கியம் நிலைக்கவும், கணவருக்குத் தீர்க்க ஆயுள் கிடைக்கவும் வேண்டி வழிபாடு செய்தனர். மூத்த சுமங்கலி பெண்களின் ஆசியோடு, புதுமணத் தம்பதிகள் புதிய மஞ்சள் கயிறை அணிந்து, சிறப்புப் வழிபாடுகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆற்றங்கரையைச் சாணத்தால் மொழுகி, வண்ணக் கோலமிட்டு, நெய்வேத்திய பொருட்களைப் படையலிட்டனர். விவசாயம் செழித்து கூடுதல் விளைச்சல் அருள வேண்டும் என்று அவர்களில் பலரும், அகல் விளக்கேற்றி வாழை மட்டை மீது வைத்து ஆற்று வெள்ளத்தில் மிதக்க விட்டு மனமுருகி வழிபட்டனர்.

Tags : Mullai Periyatankara ,Teni ,Adipere Festival ,Mullai Periyaat ,Veerapandi, Teni ,Tamil Nadu ,Auditor ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...