×

கம்பம் அருகே உயரழுத்த மின் கோபுரங்களை மாற்றிடத்தில் அமையுங்கள்: விவசாயிகள் கோரிக்கை மனு

 

கம்பம், ஆக. 3: கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி சுடுகாடு அருகே புதியதாக 110/22 கி.வோ துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கம்பத்தில் இருந்து மின் கம்பிகள் கொண்டு செல்வதற்காக வழித்தடம் அமைக்கப்பட்டு மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கம்பம் ஊத்துக்காடு செல்லும் சாலையில் உள்ள நாககன்னியம்மன் கோயில் அருகே, மேற்கில் இருந்து கிழக்கேயுள்ள கோசந்திர ஓடை பகுதிகள் வழியாக உயர் அழுத்த மின் கம்பிகள் கொண்டு செல்வதற்காக, மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், மின் கோபுரங்களை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கோரி, அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காமயகவுண்டன்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் துணை மின்நிலையத்திற்கு உயர் அழுத்த மின் கம்பிகள் கொண்டு வரும் மின்பாதைக்காக கோசந்திர ஓடை வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நடைபெற்றால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஏனெனில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் பாதையில் இருபுறமும் வீடுகள் மற்றும் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத மாற்று வழித்தடத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

Tags : Kambam ,Kamayagaundanpatti crematorium ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...