தொழில் துவங்குவதாக கூறி மலேசிய தொழிலதிபரிடம் மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ, மகன் ரூ.1.65 கோடி மோசடி: ஈரோடு எஸ்பியிடம் பரபரப்பு புகார்

 

ஈரோடு: தொழில் துவங்குவதாக கூறி மலேசிய தொழிலதிபரிடம் மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சண்முகன் மற்றும் அவரது மகன் ரூ.1.65 கோடி மோசடி செய்து விட்டதாக ஈரோடு எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பெரியார் நகர் சிதம்பரம் காலனியை சேர்ந்த சிவகுமார் (49), மலேசியாவை சேர்ந்த வர்மன் என்பவரது சார்பில் நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

வர்மன் மலேசியாவில் இருந்து அவரது சொந்த வேலைகளுக்காக கடந்த 14-2-2019ல் இந்தியா வந்திருந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ சண்முகன், அவரது மகன் பிரதீப் ஆகியோரை சந்தித்து, ‘எஸ் அண்ட் எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ என்ற பெயரில் கட்டிட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் தொழில் துவங்க இருப்பதாக கூறினார்.

இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஒப்பந்தம் எழுதி கொண்டு, ரூ.2 கோடியை சண்முகனும், அவரது மகனும் பெற்றுக்கொண்டனர். ஆனால், பேசியபடி எந்த தொழிலும் தொடங்காமல் காலம் கடத்தி வந்தனர். இதையடுத்து தான் கொடுத்த ரூ.2 கோடியை வர்மன் திரும்ப கேட்டார்.

அதற்கு சண்முகன் முதற்கட்டமாக ரூ.15 லட்சத்தையும், மீதமுள்ள தொகையை இரு தவணையாக தருவதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து கடந்த 2022 ஜனவரி மாதம் ரூ.10 லட்சமும், 2024 மே மாதம் ரூ.10 லட்சமும் ரொக்கமாக அளித்தார். மீதமுள்ள ரூ.1 கோடியே 65 லட்சத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் சண்முகன் மொடக்குறிச்சி தொகுதியில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, சண்முகனை தொடர்பு கொண்டு வர்மன் பணத்தை கேட்டதற்கு, தேர்தல் முடிந்தவுடன் தருவதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால், எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சண்முகனை பணம் கேட்டு தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் பதிலளிக்காமல் இருந்தார். எம்எல்ஏ சண்முகன் வர்மனிடம் பெற்ற ரூ.1.65 கோடியை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்யும் எண்ணத்தில் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் வர்மன் சார்பாக சண்முகனை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டபோது, ‘நான் இப்போது எம்எல்ஏ. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ, பணத்தையெல்லாம் திரும்ப தர முடியாது, மீறி கேட்டால் கொன்னுடுவேன்’ என மிரட்டல் விடுத்தார். எனவே, எம்எல்ஏ சண்முகன் பெற்ற பணத்தை திரும்ப பெற்று தருவதோடு, வர்மனையும், என்னையும் மிரட்டி அச்சுறுத்தியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

ரூ.2 கோடி வாங்கினேனா? எம்எல்ஏ விளக்கம்

எம்எல்ஏ சண்முகன் கூறுகையில்,“இந்த புகார் பொய்யானது. தேர்தலுக்கு முன்பாகவே இதுபோல புகாரை கொடுத்து என்னை பிளாக் மெயில் செய்ய பார்த்தார்கள். தற்போது, மீண்டும் புகார் அளித்துள்ளனர். நான் அவர்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர போகிறேன். எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இதுபோல செய்கின்றனர். அது ஒரு பிசினஸ் ஒப்பந்தம். அதை அவர்கள் முறையாக செய்யவில்லை.

ஒப்பந்தம் போட்டதுடன் சரி, அவர்கள் என்னிடம் ரூ.2 கோடி தரவில்லை. அவர்கள் கூறுவது அனைத்தும் பச்சை பொய். நான் நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறேன். அவர்கள், இந்த ஒப்பந்தத்தை வைத்து 4 முறை மிரட்டியுள்ளனர். நான் தற்போது எம்எல்ஏ ஆகி விட்டதால், அதை வைத்தே மிரட்டி வருகின்றனர். நான் இந்த வழக்கை நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறேன்” என்றார்.

Related Stories: