திருவண்ணாமலை அருகே குடும்பத்தகராறில் விபரீதம்; இரும்பு கம்பியால் அடித்து மருமகன் கொலை: மாமனார் மற்றும் மாமியார் மீது வழக்கு

திருவண்ணாமலை, ஜூலை 29: திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் மருமகனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக மாமனார் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருவண்ணாமலை அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன்(40), கட்டிட தொழிலாளி. அவரது மனைவி பிரேமா(35). இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், ஆலத்தூர் கொல்லக்கொட்டாய் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டில் கோதண்டராமன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

சமீபகாலமாக மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என கோதண்டராமன் தனது மனைவியை அழைத்துள்ளார். ஆனால், மகளை அனுப்ப பெற்றோர் மறுத்துள்ளனர். அதனால், கடந்த 25ம் தேதி அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த மாமனார் தனபால், மாமியார் கவுரி ஆகியோர், இரும்பு தடி (ஊதாங்கோல்) மற்றும் பூரி கட்டையால் கோதண்டராமனை தாக்கியுள்ளனர்.

அதில், பலத்த காயம் அடைந்த கோதண்டராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கோதண்டராமன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது தொடர்பாக, மாமனார் தனபால், மாமியார் கவுரி, மனைவி பிரேமா ஆகியோர் மீது திருவண்ணாமலை தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

 

Related Stories: