டிரேடிங்கில் முதலீடு செய்வதாக கூறி ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.50 லட்சம், 27 சவரன் நகை மோசடி

 

புதுச்சேரி, ஜூலை 30: புதுச்சேரி புதுசாரம் ஒத்தவாடை வீதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சங்கீதா (31), தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன், இவரது கல்லூரி நண்பரான திலீப், அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் தந்தை தணிகாசலம் ஆகியோர் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். அப்போது, திலீப், தான் நடத்திய நிதி நிறுவனத்தில் டிரேடிங்கில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதற்கு, சங்கீதா தன்னிடம் பணமில்லை என தெரிவிக்கவே, அவரிடம் டிரேடிங்கில் முதலீடு செய்ய பல நிதி நிறுவனங்களில் லோன் கொடுப்பதாகவும், அதனை முதலீடு செய்தால் ஒரே மாதத்தில் 3 மடங்கு லாபம் கிடைக்கும் என திலீப் ஆசையை தூண்டியுள்ளார்.

இதனை நம்பி சங்கீதா கடந்த 2024ம் ஆண்டு 3 தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து 3 தவணைகளாக ரூ.39 லட்சத்து 57 ஆயிரத்து 748 கடனாக வந்துள்ளது. இதையடுத்து, அரும்பார்த்தபுரத்தில் உள்ள கணவர் சிவாவின் அலுவலகத்தில் இருந்த சங்கீதாவை நேரில் சந்தித்த திலீப், ராஜேஸ்வரி, தணிகாசலம் ஆகியோர் முதலீடு குறித்து பேசி, கடன் தொகையை உடனடியாக ராஜேஸ்வரியின் வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின் திலீப், சங்கீதாவை சந்தித்து முதலீடு செய்த பணத்திற்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைத்ததாக கூறி வழங்கியுள்ளார். அதில், நம்பிக்கை கொண்ட சங்கீதா கூடுதலாக ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளார். உடன் திலீப், உங்கள் நகையை முதலீடு செய்தால், 30 நாளில் ரூ.1 கோடி கிடைக்கும் என்றார். அதனை நம்பிய சங்கீதா அவரிடமிருந்த 27 சவரன் நகையை, டிரேடிங்கில் முதலீடு செய்ய கொடுத்துள்ளார்.

பணம் மற்றும் நகைகளை வாங்கி சென்ற திலீப், ராஜேஸ்வரி, தணிகாசலம் ஆகிய மூவரும் அதன்பிறகு சங்கீதாவிடம் லாபத்தை தரவில்லை. சந்தேகமடைந்த சங்கீதா, நேரில் சென்று திலீப் உள்ளிட்ட மூவரிடமும், தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளை கேட்டபோது முதலீடு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், பணத்தை விரைவில் கொடுப்பதாக உறுதியளித்தனர். இந்நிலையில் திலீப் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சங்கீதா விசாரித்தபோது, டிரேடிங் தொழில் செய்வதாக கூறி, இதேபோல் திலீப் பல பேரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

அதில், அதிர்ச்சியடைந்த சங்கீதா மற்றும் கணவர் சிவா ஆகியோர் பணம் மற்றும் நகையை திருப்பி கேட்டபோது, பணத்தை தர முடியாது. பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டவே, உடனடியாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் சங்கீதா புகார் அளித்தார். அதன்பேரில் திலீப், ராஜேஸ்வரி, தணிகாசலம் ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குபதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

 

Related Stories: