திருவாடானை, ஜூலை 30: திருவாடானை அருகே ஓரியூர் திட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தேவகோட்டை எஸ்பி பட்டினம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இவ்வூரிலிருந்து, கிராமத்திற்குச் செல்ல சுமார் ஒன்னேகால் கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்டல் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் மோசமான நிலையில் இருந்த இந்தச் சாலை அப்போது புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால், சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தற்போது முற்றிலும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்குச் சாலை மிக மோசமாக மாறியுள்ளதுடன், வெளியூர்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோரும், தினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தேவராஜ் தெரிவிக்கையில், திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை (பிடிஓ) நேரில் சந்தித்துச் சாலையைச் சீரமைக்கக் கோரியபோது, இந்த சாலை தங்கள் பராமரிப்பின் கீழ் உள்ளதாகப் பதிவில் இல்லை. ஒன்றியத்தின் கணக்கிலேயே இந்தச் சாலை வரவில்லை என்றும் கூறி அதிர்ச்சியளித்ததாகக் குறிப்பிட்டார். ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றியக் கணக்கில் கூட இல்லாத ஒரு சாலையில் பல ஆண்டுகளாகத் தாங்கள் பயணித்து வருவதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுத்துச் சாலையை விரைவாகச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
