×

ஆவடியில் பரபரப்பு; பல்லி கிடந்த காலை உணவு சாப்பிட்ட 40 தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்

ஆவடி: ஆவடியில் சாம்பாரில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 40 தூய்மைபணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் சீரியஸாக உள்ளனர். இவர்களை முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, ஆவடி சின்னம்மன் கோயில் அருகேயுள்ள தனியார் நிறுவனம் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் உணவு தயாரிக்கப்பட்டு அந்தந்த மண்டலம் அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர் உணவு அருந்தும் அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆவடி மாநகராட்சி மண்டலம்-3ல் பருத்திப்பட்டு பசுமை பூங்கா தூய்மை பணியாளர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உணவு அருந்தியுள்ளனர். இதில், சாம்பாரில் பல்லி இருந்த உணவை அருந்தியதால் 40க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சக தூய்மை பணியாளர்கள் அவர்களை வாகனத்தில் ஏற்றி ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில், வசந்தா (50), எமிலி (50), குமார் (40), விஜயலட்சுமி (50) ஆகிேயாரின் உடல்நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, ஆவடி மேயர் ஜி..உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆவடி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறினர். இவர்களுக்கு தீவிர சிகிச்ைசை அளிக்கும்படி டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டனர். இந்த விவகாரம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், ”கடந்த சில தினங்களாக தூய்மை பணியாளர்களுக்கு தயாரிக்கும் உணவில் கரப்பான் பூச்சி, பல்லி, புழு ஆகியவை இருப்பதாகவும், முறையாக சாப்பாடு வேகவைக்காமல் இருப்பதாகவும் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குற்றம்சாட்டினர். ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா கூறுகையில், ”ஆவடி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவில் பல்லி இருந்ததாக தகவல் வந்தன் பேரில் உடனடியாக மற்றவர்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்தும்படி அறிவுறுத்தேன். உடனடியாக தூய்மை பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து பார்த்தபோது அதில் 4 தூய்மை பணியாளர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை பார்த்து நலன் விசாரித்தேன். அவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல் இருப்பதாக கூறியதன்பேரில் தீவிர கண்காணிப்பில் வைக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினேன். பெரிய பாதிப்பு ஏதுமில்லை. அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உடல் பரிசோதனை மேற்கொள்ளும்படி மருத்துவர்களிடம் அறிவுறுத்தேன். உணவு பாதுகாப்பு துறை மூலம் 21 இடங்களில் வழங்கப்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம். மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தவறு கண்டறிந்தால் அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags : Avadi ,Former Minister ,Avadi S.M. Nassar ,
× RELATED கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு