*நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஆம்பூர் : ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் அதிவேக பைக்குகளை அச்சுறுத்தும் வகையில் ஓட்டி ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் கனரக வாகனங்கள், பஸ், லாரி, கார், பைக் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கில் செல்கின்றன.
இந்நிலையில், இவர்களை அச்சுறுத்தும் வகையில் ஆம்பூர் உயர்மட்ட பாலத்தின் மீது இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பைக்குகளை அதிவேகமாக இயக்கி சாகசங்களில் ஈடுபடுகின்றனர். அதிவேகமாக வந்து திடீரென பிரேக் பிடித்து வீலிங் செய்வது, திடீரென பிரேக் பிடித்து சினிமா சண்டை காட்சிகளை போல பைக் மீது நிற்பது ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேற்றுகின்றனர்.
இளைஞர்களின் இந்த செயலால் அவ்வழியாக செல்லும் அதிவேக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் செயல்படும் வாகன ஓட்டிகளை மாவட்ட எஸ்பி நடவடிக்கை மேற்கொண்டு வாகனத்தை பறிமுதல் செய்வதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
