திருத்தணி, ஜூலை 29: திருத்தணியில் டீக்கடையில் வடமாநில தொழிலாளியை பணம், செல்போன் கேட்டு முகத்தை மூடிக்கொண்டு கத்தியால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருத்தணியில் புறவழி சாலையில் அரக்கோணம் புறவளைவு பகுதியில் உள்ள டீக்கடையில் மூன்று நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் டீ குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு முகத்தை மூடிக்கொண்டு வந்த வாலிபர் ஒருவர் வடமாநில வாலிபரை பார்த்து செல்போன், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் இல்லை என்று மறுக்கவே, ஆத்திரமடைந்த முகமூடி அணிந்திருந்த வாலிபர் கடையில் வைத்திருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து திடீரென்று வடமாநில வாலிபர் தலையில் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து பயந்து அங்கிருந்து ஓடினர். இச்சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சோளிங்கர் அருகே அரியூர் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மகன் புருஷோத்தமன் (19) என்பவர் வடமாநில தொழிலாளியை கத்திமுனையில் மிரட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாலிபரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
