×

திருமூர்த்தி அணை கிழக்கு பகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணி துவக்கம்

உடுமலை : திருமூர்த்தி அணை கிழக்கு பகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணி நேற்று துவங்கியது.உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியது.

ஆனால் அணையில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததால் 24 ஆயிரம் கன மீட்டர் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நீர்மட்டம் குறைவாக உள்ளதால் அதிகளவு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் எடுக்கப்பட்ட வண்டல் மண் காரணமாக விவசாய நிலங்களில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. கடந்த காலங்களைப் போலவே, இந்த ஆண்டும் திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், அணையில் ஒரு டிஎம்சி தண்ணீர் கூடுதலாக தேக்க முடியும். எனவே, அரசு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில், இதற்கான அரசாணை நேற்று வெளியானது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று பொக்லைன் மூலம் அணையின் கிழக்கு பகுதியில் வண்டல் மண் எடுக்கும் பணி நேற்று துவங்கியது.அணையில் அள்ளப்பட்ட வண்டல் மண் லாரிகளில் ஏற்றி விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மரங்களால் இடையூறு திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில், காய்ந்து போன மரங்கள் ஏராளமாக கிடக்கின்றன. காண்டூர் கால்வாயில் அடித்து வரப்பட்ட மரங்கள் மற்றும் அணையின் ஓரத்தில் உள்ள மரங்கள் அடிப்பாகம் இற்று முறிந்து அணைக்குள் சேர்ந்து கிடக்கின்றன.

வண்டல் மண் எடுக்கும் இடங்களில் காய்ந்த மரங்கள் குவிந்து கிடப்பதால், மண் எடுப்பதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, வனத்துறையினர் இந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumoorthi Dam ,Udumalai ,Thirumurthi Dam ,
× RELATED முதல்வர் அலுவலக இடமாற்றத்தால்...