விருத்தாசலம், ஜூலை 28: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுகூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ஜெயகிருஷ்ணன்(31). இவரது மனைவி பிரேமா(30). இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். சொந்த ஊரில் நடந்த ஆடி மாதத் திருவிழாவுக்காக வந்திருந்த இவர்கள், விழாவை முடித்துவிட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.
வாகனத்தை ஜெயகிருஷ்ணன் தம்பி ஹரி கிருஷ்ணன்(29) ஓட்டிச் சென்றார். பின்னால் ஜெயகிருஷ்ணன் மற்றும் பிரேமா உட்கார்ந்து கொண்டு சென்றுள்ளனர். புதுக்கூரைப்பேட்டை மேம்பாலத்தில் பைக் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பிரேமா, தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்திலிருந்து சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். ஜெயகிருஷ்ணன் மற்றும் ஹரிகிருஷ்ணனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் ஓடிவந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தைத் தேடி வருகின்றனர். திருவிழாவிற்கு வந்துவிட்டு வேலைக்குத் திரும்பியபோது பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
