முன்னிலை பெற பாகிஸ்தான் முனைப்பு

 

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது. பிரையன் லாரா அரங்கில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்திருந்தது.

கவெம் ஹாட்ஜ் 83 ரன் (181 பந்து, 9 பவுண்டரி), ஷாய் ஹோப் 39 ரன்னுடன் (91 பந்து, 2 பவுண்டரி) 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹாட்ஜ் மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்ப, கிரீவ்ஸ் 15, கேப்டன் சேஸ் 10, ரோச் 3 ரன்னில் அணிவகுத்தனர். ஷமார் ஜோசப் 23 ரன் எடுக்க, சிறப்பாக விளையாடிய ஹோப் 92 ரன் (182 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன் குவித்து (98.5 ஓவர்) ஆல் அவுட்டானது. பாக். பந்துவீச்சில் முகமது அலி 4, முகமது அப்பாஸ் 3, குர்ரம் ஷாஷத் 1, ஆமிர் ஜமால் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்திருந்தது. அஸன் அவைஸ் 0, இமாம் உல் ஹக் 63, கேப்டன் பாபர் அஸம் 23 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷான் மசூத் 88 ரன், சல்மான் ஆஹா (0) களத்தில் இருந்தனர்.

 

Related Stories: