×

வாரவிடுமுறை நாளையொட்டி ஏலகிரிமலையில் குடும்பத்துடன் திரண்ட சுற்றுலா பயணிகள்

*படகு சவாரி செய்து உற்சாகம்

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,400 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது.இயற்கை நிறைந்த சூழலில் கோடை காலத்திலும் குளிர்ந்து காணப்படுகிறது.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, போன்று தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஏலகிரி மலையும் திகழ்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக வாரவிடுமுறையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகளும் சுற்றுலா தலங்களும் நிரம்பி வழிகிறது. மேலும் படகு இல்லங்களில் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பா்களுடனும் படகில் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஏலகிரிமலை நிலாவூரில் பண்டேரா பறவைகள் சரணாலயத்தில் பறவைகளுக்கு உணவு கொடுத்து விதவிதமான வெளிநாட்டு பறவைகள், நெருப்புக் கோழி, கோழி வகைகள், முயல் வகைகள், அரிய வகை ஓணான்கள், மீன் வகைகள், உள்ளிட்ட ஏராளமான செல்லப் பிராணிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வார விடுமுறையையொட்டி ஏலகிரிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து குழந்தைகளை பூங்காக்களில் விளையாடச் செய்தும் இயற்கை பூங்காவில் உள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும் குடும்பத்துடன் படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

கடந்த வாரம் கோடைவிழா நடந்த நிலையில் 2வது வாரமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஏலகிரிமலைக்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Yelagiri Hills ,Jolarpettai ,Tirupattur district ,
× RELATED தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை...