×

கார்கில் வெற்றி தினம் முன்னாள் ராணுவ வீரர்கள் ஊட்டியில் கொண்டாட்டம்

ஊட்டி : கார்கில் போர் வெற்றி மற்றும் இப்போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், டிபென்ஸ் வெட்டரன்ஸ் ஆர்கனைசேசன் சார்பில் ஊட்டி சேரிங்கிராஸ் காந்தி சிலை வளாகத்தில் கார்கில் வெற்றி தின விழா நடைபெற்றது.

கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு, மெழுகுவர்த்தி ஏந்திய மவுன அஞ்சலி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் காமத் பங்கேற்றார்.

அமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் ராமன் சுவாமி, தேசிய துணைத் தலைவர் உடிமுடி ராஜு, தேசிய பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தனியார் அரங்கில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. வரவேற்பு நடனம், கார்கில் வெற்றி தின சிறப்பு நடனம் மற்றும் பாரம்பரிய படுகர் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மேலும் 1965, 1971 மற்றும் கார்கில் போர்களில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவியருக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். அமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் ராமன் சுவாமி கூறும்போது, ‘கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

ராணுவ வீரர்களின் சேவையை நாடு முழுவதும் மக்கள் போற்றி வருகின்றனர். பாகிஸ்தானை வெற்றி கொண்ட இந்தநாள் இந்திய ராணுவ வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும்’ என்றார்.

Tags : Kargil Victory Day ,Ooty. ,Ooty ,Kargil War ,Defence Veterans Organization ,Ooty Charing Cross Gandhi Statue Complex.… ,
× RELATED பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதியதில் 9 ஆடுகள் பலி