போதிய மழை இல்லாததால் பாலைவனமாக மாறும் விளைநிலங்கள்

*தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சும் விவசாயிகள்

சென்னிமலை : பருவ மழையும் பொய்த்து போனதுடன்,பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் இல்லாததால் விளை நிலங்கள் பாலைவனம் ஆகி விடுமோ? என்ற அச்சத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் உள்ளனர். தமிழ்நாட்டின் 2வது மிகப்பெரிய அணையாக பவானிசாகர் அணை திகழ்கிறது.

இந்த அணையில் உள்ள 5 ஷட்டர்களில் 2 ஷட்டர்களை திறந்து விட்டாலே அதிகபட்சமாக 2,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 200 கிமீ தூரத்திற்கு கீழ்பவானி பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயில் இருந்து சுமார் 800 கிமீ தூரத்திற்கும் அதிகமாக கிளை வாய்க்கால்களும் அமைக்கப்பட்டுள்ளது.கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு,திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம்ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கீழ்பவானி பிரதான கால்வாயில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான கிளை வாய்க்கால்கள் இருந்தாலும், 19வது மைலில் கவுந்தப்பாடி,ஆப்பக்கூடல்,காஞ்சிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 250 கன அடி தண்ணீர் செல்லும் கிளை வாய்க்கால் மற்றும் 63வது மைலில் ஈரோடு மேட்டுக்கடை அருகே புங்கம்பாடி பகுதியில் பிரிந்து கவுண்டிச்சிபாளையம் வழியாக மொடக்குறிச்சி தாலூகாவிற்கு உட்பட்ட பூந்துறை,எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் ஒரு கிளை வாய்க்கால் என 2 பெரிய கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் 74வது மைலில் உள்ள அரச்சலூரில் பிரதான வாய்க்கால் இரண்டாக பிரிந்து சென்னிமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பாசனம் பெறுவதற்காக 428 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் ஒரு வாய்க்கால், சென்னசமுத்திரம் பகுதியில் பாசனம் பெறுவதற்காக 398 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் ஒரு வாய்க்கால் என 2 பிரதான கால்வாய்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை வழியாக செல்லும் பிரதான வாய்க்கால் திருப்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்து பின்னர் பல்வேறு ஊர்கள் வழியாக பயணித்து காங்கயம் தாலூகா முத்தூர் அருகே மங்களப்பட்டியில் நிறைவடைந்தாலும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வரை பாசன வசதி பெறுகிறது. கீழ்பவானி வாய்க்கால் லட்சக்கணக்கான மக்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை எள், கடலை, சோளம் போன்ற பயிர்களுக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற நஞ்சை பயிர்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

ஆகஸ்ட் 15ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் ஜூலை மாதத்திலேயே பயிர் செய்வதற்கான வேலைகளில் இறங்கி விடுவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு பருவ மழையும் பொய்த்து, பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து குறைந்த நிலையில், தற்போது கீழ்பவானி பாசன பகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு குடிநீருக்கும் போராட வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.

பவானிசாகர் அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 56.42 அடியாக உள்ளதால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு என்பது கேள்விக்குறியாக இருப்பதால் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கீழ்பவானி பாசன விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதுடன், எல்-நினோ போன்ற காலநிலை மாற்றம் காரணமாக இதுவரை இல்லாத வகையில் வெப்பத்துடன் கூடிய காற்றும் அதிகரித்துள்ளது.

இதனால், கிணறுகள், குளம் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் குறைந்து விட்டது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்காவிட்டால் வாழை, மஞ்சள், கரும்பு போன்ற பயிர்கள் வறண்டு போவதுடன், தென்னைகளும் அழிந்து போவதற்காண வாய்ப்புகள் உண்டு. மேலும், பாவானி சாகர் அணையும் வானம் பார்த்த பூமியாக மாறி உள்ளது.

ஒரு சில விவசாயிகள் தங்களது ஒரே வாழ்வாதாரமாக உள்ள தென்னை மரங்களை காப்பாற்ற டிராக்டர்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் தவறான நீர் நிர்வாகத்தால், சட்டப்பூர்வமாக பாசன உரிமை பெற்ற கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறிவிடுமோ? என அச்சமாக உள்ளது. அதனால் 15 நாட்களாவது கீழ்பவானி பாசன பகுதிக்கு உயிர் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: