ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் அபிஜீத் தீப்கே உரையாற்றினார். அதன் விவரம்: நீங்கள் பயப்படாமலும், இந்த அரசாங்கத்தின் முன் பணியாமலும் இருந்தால், ஒரு அமைச்சரை பதவி விலக வைக்க முடியும் என்பதற்கு இந்தப் பதவி விலகல் ஒரு சான்று. பேசுவதற்கு நீங்கள் பயந்தால், அது எப்படி ஜனநாயகமாகும்?… நாம்தான் அவர்களை அங்கு அனுப்பினோம். ஆனால் அவர்கள் தங்களை அரசர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
இந்தப் பதவி விலகல் என்பது கதையின் முடிவாக இருக்கவில்லை. இது முதல் விக்கெட். இது வெறும் ஆரம்பம் தான். விரும்பினால் யாரையும் பதவி விலக வைக்க முடியும் என்பதை இளைஞர்கள் நிரூபித்துள்ளனர். இந்த அரசு ஒருபோதும் செவிசாய்க்காது என்று கூறியது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்து-முஸ்லிம் அரசியல் இல்லாமல், பிரச்னைகளை மையமாகக் கொண்ட அரசியல் நடந்தால், அதிகார இருக்கைகள் ஆட்டம் காணும்.
இந்நாட்டு இளைஞர்கள் இந்து-முஸ்லிம் அரசியல் வலையில் விழமாட்டார்கள். அவர்கள் வேலைவாய்ப்பு குறித்துப் பேசுவார்கள். ஒரு கரப்பான் பூச்சி உள்ளே நுழைந்துவிட்டால், அவ்வளவு எளிதில் வெளியேறாத. ஒரு அமைச்சரையே பதவி விலக வைக்க முடிந்த எங்களால், உங்களை(அதிகாரிகள்) ஒன்றும் செய்ய முடியாதா? கரப்பான் பூச்சியோடு வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள். இளைஞர்கள் விழித்துக்கொண்டனர். ஜனநாயகத்தின் விடியல் வந்துவிட்டது. இவ்வாறு கூறினார்.
* ஜனநாயகத்தின் வெற்றி
கரப்பான் பூச்சி கட்சி சார்பாக 26 நாள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜனநாயகத்தின் வெற்றி. நேரடியாக வீதிகளிலிருந்து உருவான வெற்றி. அமைதி, பொறுமை, விடாமுயற்சியின் வெற்றி.
சிஜேபி மற்றும் நாட்டின் ஜென் ஸி தலைமுறையினருக்கு வாழ்த்துக்கள். அச்சத்துடன் இருந்த நிலையை தகர்த்து விட்டு நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் எழுந்து நின்ற அனைத்து குடிமக்களுக்கும் நன்றி. பொறுப்புக்கூறலிலிருந்து சீர்த்திருத்தங்களை நோக்கி’’ என குறிப்பிட்டார்.
* ஜந்தர் மந்தரில் மீண்டும் கல்வீச்சு
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த சிறிது நேரத்தில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பிரிவினர் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசியதில் சிறப்பு காவல் ஆணையர் உட்பட 3 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்ததாக போலீசார் கூறினர். கூட்டத்தில் இருந்த சிலர் ஆக்ரோஷமாக செயல்படத் தொடங்கியதால் வன்முறை வெடித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் சிறிது நேரத்தில் அமைதி மீட்கப்பட்டது.
* கொலை முயற்சி உட்பட 13 குற்றச்சாட்டுகள் பதிவு
நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின் போது கடமை பாதை பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கடமை பாதை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் கொலை முயற்சி உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. பாதுகாப்பு தடுப்புகளை உடைக்க முயன்ற போராட்டக்காரர்கள், போலீசாரை கொல்லும் நோக்கத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த வன்முறையில் 60 போராட்டக்காரர்களும், 200 போலீசாரும் காயமடைந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
* வினாத்தாள் கசிவு சட்ட திருத்த மசோதா நாளை தாக்கல்?
வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் 2024-ஐ திருத்துவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மசோதாவின்படி, வினாத்தாள் தொடர்பான விசாரணைகள் 2 மாதத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நடத்தி முடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
