×

இலாகாவுக்கு ஒப்புதல் தராமல் கவர்னர் இழுத்தடிப்பு: புதுவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் ரங்கசாமிக்கு நெருக்கடி

 

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்களுக்காக இலாகா பட்டியலுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருவதால் முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மற்றும் 5 அமைச்சர்கள் பதவியேற்றும் இதுவரை இலாகா ஒதுக்கப்படாமல் உள்ளது. சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கு முதல்வர் ரங்கசாமியே காரணம் என்று கூறப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் முடிந்து 77 நாட்களாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படாததால் அமைச்சர்களும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே அடுத்த மாதம் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

இதற்காக ரூ.14,500 கோடிக்கு பட்ஜெட்டை மாநில அரசு இறுதி செய்து அதற்கான கோப்பை ஒன்றிய அரசுக்கு அனுப்பிய நிலையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலர் சரத் சவுகான், அரசுத் துறை செயலர்களுடன் முதல்வர் ரங்கசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே கடந்த 20ம்தேதி அமைச்சர்களின் துறைகள் அடங்கிய பட்டியலை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து முதல்வர் ரங்கசாமி அளித்தார். வழக்கமாக ஒரு மணி நேரத்தில் ஆளுநர் இதற்கு அனுமதி தந்துவிடுவார். அதன்பிறகு அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி விடும். ஆனால் பாஜகவுக்கு கடந்த முறை ஒதுக்கிய இலாகாக்கள் இந்தமுறை ஒதுக்கப்படாத நிலையில் துணைநிலை ஆளுநர் அனுமதி தருவதில் தாமதம் ஏற்படுத்துவதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

முதல்வர் ரங்கசாமி இலாகா பட்டியல் தந்து 3 நாட்களாகியும் இன்னும் ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காதது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் ஒரு அசாதாரண நிலைமையாக பார்க்கப்படுகிறது. இந்த தாமதம் பற்றி கவர்னர் மாளிகை தரப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேபோல் பாஜகவும் இதைப்பற்றி வாய் திறக்காமல் வழக்கத்திற்கு மாறாக மவுனம் காத்து வருகிறது. இந்த சிக்கலால் மத்திய உள்துறை ஒப்புதல் தந்தும், புதிய சட்டப்பேரவையை கூட்டி, பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலையில் புதுச்சேரி யூனியன் பிரேதச அரசு தள்ளப்பட்டுள்ளதால் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

Tags : Rangasamy ,Puducherry ,Chief Minister ,Deja Coalition ,
× RELATED மாணவர்கள் போராட்டத்தின் முக்கிய...