ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 124 (பகவத்கீதை உரை)
தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்
யததே ச ததோ பூய ஸம்இத்தௌ குருநந்தன (6:43)
‘‘குரு குலத்தில் பிறந்தவனே, அர்ஜுனா, முற்பிறப்பின் யோகசாதன பயிற்சியை இப்பிறப்பில் ஒரு யோகி தொடர்ந்து முயல்கிறான். மோட்சத்தை அடையும் நோக்கில் அவன் வெகுவாக
முயல்கிறான்.’’ஞானப் பயணத்தை நிறைவு செய்ய இயலாதவாறு முந்தைய பிறவி முடிந்து விட்டது. ஆனால் பரமபதத்தை அடைய வேண்டிய வேட்கை மறையாததால், அடுத்த பிறவியில் அந்தப் பயணத்தைத் தொடரும் ஆவல் அதிகரிக்கிறது. அதற்கேற்றாற்போல இப்பிறவி, அறம் வளர்க்கும் குடும்பத்திலேயே நிகழ்ந்தும் விடுகிறது. யோகவானாக விளங்கும் தந்தைக்கு ‘தோன்றின் புகழொடு தோன்றும்’ வாய்ப்பும் கிட்டிவிடுகிறது.
இத்தகையவர்கள்தான் பரமாச்சார்யார்களாகவும், யோகிகளாகவும், யோகஞானத்தைப் போதிக்கும் குருமார்களாகவும், இறைவனின் பிரதிநிதிகளாக உலகை ரட்சிக்க அவதாரம் எடுக்கிறார்கள். இவர்களுடைய உபதேசங்களைக் கேட்பவர்கள், தத்தமது பூர்வ ஜன்ம யோகப் பயணத்தைத் தொடர்பவர்களாகவும் அமைகிறார்கள். ஆத்மார்த்தமாக இவ்வாறு குருமார்களைப் பின்தொடர்பவர்களுக்கு யோகம் சித்திக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் காட்டிய ஈடுபாடு, மன சஞ்சலத்தால் நீர்த்துப் போகுமானால், உலகாயத பற்றுகளால் கட்டுண்டு விடுமானால், இனி அந்த யோக நிலையை அடைய அவர்கள் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டியிருக்குமோ!
‘விட்ட குறை, தொட்ட குறை’ என்று சொல்வார்கள். நம் செயலாக்கத்தில் முழுமையடையாமல் ஏதேனும் குறை இருந்தால், அதை நம்மால் நிறைவு செய்ய முடியும். என்ன, அவ்வாறு நிறைவு செய்ய மேற்கொள்ளும் காலம்தான் வித்தியாசப்படும்; சிலருக்கு அதே பிறவியில், சிலருக்கு அடுத்தடுத்த பிறவிகளில்!
காஞ்சி மஹா ஸ்வாமிகள் தனது ‘தெய்வத்தின் குரல்’ நூலின் நான்காம் பாகத்தில் இதை விளக்குகிறார்: ‘‘அத்வைதாநுபவம் பெற்ற அநேக மஹான்கள் இப்படித்தான் ஞான விசாரம் பண்ணுவது, ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தைச் சொல்லும் மஹா வாக்யங்கள் காட்டுகிற பரம உத்தம நிலைகளையே ஸதா, அநுசந்தானம் பண்ணிக் கொண்டிருப்பது என்றிருந்து அதிலிருந்தே அப்படியே மனோதீதமான ப்ரஹ்மநுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஈச்வரன் ஜகத்திலேதான் ஒளிந்து விளையாடுகிறான் என்றில்லாமல், முக்தி தருவதிலும் தன்னை ஒளித்துக் கொள்கிறான்.
‘‘தன்னை ஒளித்துக் கொள்கிறான்’ என்றால் நாம் ஈச்வரனாக எதை நினைக்கிறோமோ, அந்த ஸகுணத்தைத்தான். அது அவனுடைய நிஜ ‘நான்’ இல்லை என்றும், அதற்கும் அடியில் அவன் நிர்குண ஆத்மாவாக இருக்கிறான். ஆனபடியால் ஆத்மாநுபவம் ஒரு ஜீவனைக் கவிந்து கொண்டே வந்து அப்படியே தனக்குள் அடக்கி, ஐக்யப்படுத்திக்கொண்டு விடுகிறது என்னும்போது ஈச்வரன் ஒளிந்து கொள்கிறானென்பதுகூட சரியில்லை; தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தில் அந்த ஜீவனை அவன் இறுக்கி, இறுக்கிப் புதைத்துக்கொள்கிறான் என்றுதான் அர்த்தம். ஜீவனுடைய ஜீவ வேஷத்தைக் கலைக்கிறது போலவே, தன்னுடைய ஈச்வர வேஷத்தையும் கலைத்தே சூட்சுமமாக அநுக்ரகித்து அத்விதீயமான ப்ரஹ்மத்தில் இரண்டையும் ஒன்றாக்கிவிடுகிறான்.
‘‘இதனால்தான் அநுபூதிமான்களாக இருக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஞானசித்தி எப்படி ஏற்பட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் அநேகம் பேர், ‘இப்படி, இந்த மாதிரி ஞான மார்க்கத்திலேயே சாதனை பண்ணினோம், திடீரென்று ஒரு நாள் மனஸ் அப்படியே நின்றுபோய், ஸ்வ – ஸ்வரூபாநுபூதி ஏற்பட்டு விட்டது’ என்ற ரீதியில் சொல்கிறார்கள். இதில் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஈச்வரன், ‘நான்தான் ஈச்வரன்’ என்று ஸகுணத்தில் காட்டிக் கொண்டு, ‘இந்தா ஞானம்’ என்று எதையோ பொட்டலம் கட்டிக்கொண்டு வந்து கொடுப்பதில்லை.
தன் ஸகுண ரூபத்தை மறைத்து சூட்சுமமாகவே இந்த அநுக்ரஹத்தைச் செய்வதாகவே அவன் அநேக மஹான்களிடம் செய்திருக்கிறான். இன்னும் சில பேருக்கு ஞானோபதேச குருவாகவே வந்து அவர்களை ஞானத்திலே அழைத்துக் கொண்டு போயிருக்கிறான். ஒரே பக்தியாக அவனை ஆராதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவன்தான் பண்ணுகிறானென்று நன்றாகத் தெரியும்படியாக திடீரென்று அந்த அநுபூதியை வாரிக் கொடுத்திருக்கிறான்.”
அருணகிரிநாதர், ‘யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே’ என்று சொல்லி வியக்கிறார். தன்னையே எடுத்துக் கொண்டு ‘நான்’ அல்லாத, தானாக ஆக்கிக் கொண்ட பரம்பொருள் என்று முருகப் பெருமானைப் புகழ்ந்து சொல்லி மெய்சிலிர்க்கிறார்.இதையே நம்மாழ்வாரும், ‘யானே நீயாகி என்னை யளித்தானே!’ என்று பரந்தாமனின் பேரருளைப் போற்றுகிறார். தன் ‘திருவாய் மொழி’யில் நிறைவுப் பகுதியாக, கொதிக்கும் ஒரு இரும்புப் பாத்திரத்தில் ஒரு சொட்டு நீர் விழுந்தால், அது எப்படி உடனே பாத்திரத்துடன் ஐக்கியமாகி ஆவியாகவும் போய்விடுகிறதோ, அதைப் போல என்னை ஈர்த்துக் கொண்டாயே பெருமாளே என்று சொல்லி பக்தி மேலிட நெகிழ்கிறார்.
நம்முடைய காலத்தில் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருவரும் யோகாரூடர்களாகவே திகழ்ந்தார்கள். முப்பத்தொன்பது வயதே இப்பூவுலகில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்திருந்தார் என்றால், அவருடைய பூர்வ ஜன்மத்து பாக்கியை இந்தப் பிறவியில் இந்த வயதுக்குள் அவர் தீர்த்துவிட்டார் என்றும், அதனாலேயே மீண்டும் பிறவி இல்லா இறைநிலையை அடைந்து விட்டார் என்றும் ஆன்றோர்கள் விளக்கம் சொல்வார்கள். ஆதிசங்கரரும் முப்பத்திரண்டு ஆண்டுகள்தான் இவ்வுலகில் ஜீவித்திருந்தார்.
ஏன், திருஞான சம்பந்தர், தன் பதினாறாவது வயதிலேயே, ஆச்சாள்புரம் திருத்தலத்தில் சிவ சோதியுடன் கலந்த சுடராகிவிட்டாரே! இந்த ஞானியரின் வாழ்க்கை வரலாற்றை ஆராயும்போது அவர்கள் அந்தக் குறுகிய ஆயுட்காலத்திற்குள் எத்தகைய ஆன்மிக அறச் செயல்களைப் புரிந்திருக்கிறார்கள் என்றும் அறியும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இவர்களைப் போல அல்லாமல், ஸ்ரீ மத் ராமானுஜர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், காஞ்சி மஹா பெரியவர் போன்றோர் நீண்ட ஆயுள் பெற்று உலக நன்மைக்காக சேவை புரிந்திருக்கிறார்களே, இவர்கள் அதற்குப் பிறகுதான் ஞான வெளிச்சம் பெற்றார்களா என்றும் கேட்கலாம். ஆனால் இத்தகையவர்களை, இறைவன் மக்கள் சேவைக்காகவே பணித்திருக்கிறான்.
தங்களுடைய அறிவுரைகள், தங்கள் அனுபவங்கள், பிரமிப்பூட்டும்படி மேற்கொண்டிருந்த அமானுஷ்ய சக்திகள், அவற்றை அவர்கள் வெளிப்படுத்திய விதம் என்று எல்லாவற்றையும் யோசித்துப் பார்ப்போமானால், தங்களைப் பின்பற்றுபவர்கள். தங்களால் ஞானஒளி பெற அவர்களைக் கைதூக்கி விட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். பூர்வ ஜன்மத்தில் சற்றே அரைகுறையாக விட்டுப்போயிருக்கக் கூடிய இந்தப் பணியை, இப்போது தொடர்ந்து மேற்கொண்டு அந்தப் பெரியவர்கள் தம் பங்கை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது, ‘விட்ட குறை, தொட்ட குறை’ சொற்றொடரில் ஒரு சந்தேகம் எழலாம். விட்ட குறை என்பது ஞானப் பயணத்தைத் தொடர இயலாமல் போனது என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் அது என்ன தொட்ட குறை? மிகவும் சாதாரணமாக, ‘விருப்பம் இல்லாத ஒரு பெண்ணைத் தொட்டதால் ஏற்பட்ட குறை (பாவம்) என்று குதர்க்கமாக சிலர் விளக்கம் தரக்கூடும். ஆனால், இதற்கும் அதுவேதான் அர்த்தம். அது, ‘தொட்ட துறை’ என்றிருந்திருக்க வேண்டுமோ என்றும் தோன்றுகிறது. அதாவது தொட்டு விட்டு வந்த துறையில் குறை என்று பொருள்கொள்ள வேண்டும். முற்பிறவியில் தொட்டு, விட்டுவிட்ட குறையை இப்பிறவியில் முழுமையாக்கி நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்றே அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். முந்தைய ஜன்மத்தில் விட்ட இடத்திலிருந்து இந்த ஜன்மத்தின் வாழ்க்கையும், அனுபவங்களும் தொடருகின்றன. இவர்களில் சிலருக்கு அப்போதிருந்த கொஞ்ச நஞ்ச வாழ்வியல் ஆசைகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்துதான் இந்தப் பிறப்பில் ஒரு குறிப்பிட்ட வயதுவரை ஆயுள் என்று பகவானால் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது அந்த வயதுக்குள் வாழ்வியல் அனுபவங்களைப் பெற்றுத் தீர்க்க வேண்டிய காலகட்டம். அது முற்றிலுமாகத் தீர்ந்த பிறகு, மேகம் விலகி ஆதவன் வானில் ஒளிர்வதுபோல அவர்களுக்கு ஞானப் பிரகாசம் தோன்றும். கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு ஆறுதல் அளிக்கிறார்: ‘‘கவலைப்படாதே அர்ஜுனா. இப்போதைய யோகப் பயிற்சியைத் தொடருவது என்பது முந்தைய பிறவியின் மிச்சம்தான். இந்தப் பிறவியிலும் உன் ஈடுபாட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அது மேலும் மிச்சமாகக் கூடும்.
அதனால் ‘யோகமடைந்து விட்டேனா, எப்படி அறிவது?’ என்று எண்ணி மயங்காதே. அந்த ஞானப் பிரகாசம் உன் உள்ளத்தில் தோன்றும்போது நீ புதியவனாக ஜனிப்பது போல உணர்வாய். அதாவது இந்தப் பிறவியிலேயே புனர்ஜன்மம்! யோகத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வீணாவதில்லை. ஏனென்றால் அது இறைவனை நோக்கி நீ எடுத்து வைக்கும் அடி. இந்தப் பயணம் குறையாக முடிந்துவிட்டாலும் அதை உன்னால் உணரமுடியும். அதை முடிக்கக் கூடிய பிறவி வாய்ப்பு(கள்) வரும் என்ற நம்பிக்கையும் உருவாகும்.
அதனால் யோகத்தில் சாதிக்க முடியவில்லையோ என்று கற்பனை அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாதித்தாய், சாதித்துக் கொண்டிருக்கிறாய், சாதிக்கப் போகிறாய். அவ்வளவுதான்.’’இறைவன் தன் இருப்பை மௌனத்தால்தான் தெரிவிக்கிறார். அவர் ஏதும் சொல்லாததால் யோகப் பயணத்தின் எந்தத் தொலைவில் நாம் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதுவரையிலான யோக அனுபவத்தால் நம் ஆழ் மனதில் ஏதேனும் குரல் ஒலிக்கும். அது நம் ஆன்மாவின் குரலாகவும் இருக்கலாம். ஆனால், அது ‘நீ யோகவானாகி விட்டாய்,”அல்லது ‘இன்னும் பாக்கி இருக்கிறது’ என்றெல்லாம் முடிவைச் சொல்லாது. அதனால் நம் இப்பிறவியின் ஆயுள் முடியுமட்டும் யோகப் பயணத்தை தொய்வடையாமல் தொடரத்தான் வேண்டும்.
கல்லால மரத்தடியில் யோக நிலையில் ஆழ்ந்திருக்கும் தட்சிணா மூர்த்தி மெலிதான புன்னகையுடன், அமைதியே வடிவாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் சனகாதி முனிவர்கள். அவர்கள், அவருடன் மௌன மொழி பேசுகிறார்கள்; அவரும் மௌன பதில் அளிக்கிறார். அவர்கள் பேசிக் கொள்வது, ‘காற்றின் மொழி, பூவின் மொழி, கடலின் மொழி!’
பிரிட்டிஷ் பத்திரிகையாளரான பால் ப்ரண்டன், தன் ஆன்மிகத் தேடலுக்கான சரியான பூமியாக பாரதத்தைத் தேர்ந்தெடுத்தார். தென்பகுதிக்கு வந்த அவர், காஞ்சி பரமாசார்யாரை தரிசித்தார். தன் தேடலின் தாகத்தைத் தெரிவித்தார். அவருடைய மனதைப் படித்த பெரியவரும், அவருக்குச் சரியான ஆசானாக அமையக் கூடியவர் ரமண மகரிஷிதான் என்பதை உணர்ந்தார். அவ்வாறே யோசனை சொல்லி அவரை அனுப்பி வைத்தார்.
உடனே திருவண்ணாமலைக்கு ஓடோடி வந்து ரமணாசிரமத்தினுள் நுழைந்தார் பால் பிரண்டன். மகரிஷியை சந்தித்தார். முதலில் வெறும் பார்வைப் பரிமாற்றம்தான். பிறகு, ரமணர் முன் அமர்ந்தார். மனசுக்குள் ஆன்மிக அலைகள் கரை புரண்டு ஆர்ப்பரித்தன. ஞானத்தேடல், ஏக்கம், பிரவாகமாகப் பொங்கியது. ஆனால் வாய் ஏனோ திறக்கவில்லை, நா ஏனோ எந்த சந்தேகத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தனக்குள் ஏதோ ஒளி ஊடுருவதை அவர் உணர்ந்தார். என்ன மாயம் இது! பளிச்சென்று துடைத்து விட்டாற்போல மனசு சுத்தமாயிற்றே! கொந்தளித்த குழப்பங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன! என்ன பேரானந்தமான அமைதி இது!
ஆனாலும் அவரால் தன் ஆன்ம அனுபவத்தை விளக்க முடிந்தது. ஆமாம், ‘எ சர்ச் இன் சீக்ரெட் இந்தியா’ என்ற நூலில் அவர் தன் ஆன்ம பரிசோதனையை விவரித்திருக்கிறார். தட்சிணாமூர்த்தி போல மௌனமொழி மூலம் ரமண மகரிஷி தனக்குத் தத்துவ போதனை அருளியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். யோக சாதனை செய்பவர்கள், இறைவன் தம்முடம் ‘பேசுவதை’ உணர்வார்கள்.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்
