தம்மம்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் தர்ணா அதிகாரி சமரசம்

ஆத்தூர், ஜூலை 23: தம்மம்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கெங்கவல்லி தாலுகா, தம்மம்பட்டி வாரச்சந்தை செல்லும் சாலையில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை பல்வேறு கிராமங்களுக்கு பிரதான சாலையாக இருந்து வரும் நிலையில் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவிகள் இதில் சென்று வருகின்றனர்.

அப்போது குடிமகன்கள் மதுபோதையில் பெண்கள் மற்றும் மாணவிகளை தொந்தரவு செய்து வந்தனர். இதனால் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடையை அகற்றக்கோரி, பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணியளவில் கடை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், கடையை உடனடியாக அகற்றக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர் அழகுராணி, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை தொடர்ந்தனர். பகல் 12 மணியாகியும் கடையை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சேலம் டாஸ்மாக் உதவி மேலாளர் சரவணகுமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒரு மாதத்திற்குள் கடையை அகற்றி கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, பகல் 2 மணிக்கு கடை திறக்கப்பட்டது.

Related Stories: