நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆக.1ம் தேதி துவக்கம் வீடு, வீடாக செல்ல 2,800 பேர் நியமனம்

நாமக்கல், ஜூலை 23: நாமக்கல் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 2,800 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் 1ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கின்றனர். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், நேற்று மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மதுபாலன் பேசியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 2,800 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடவுள்ளார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்தில் வரும் 1ம் தேதி ஆகஸ்ட் 30ம் தேதி வரை வீடுகள் தோறும் சென்று, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதன் முதற்கட்டமாக, கடந்த 17ம் தேதி முதல் மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் இம்மாத இறுதி வரை நடைபெறும்.

பொதுமக்கள், தங்களது வீட்டின் வசதிகள் குறித்த அடிப்படைத் தகவல்களை, தாங்களாகவே செல்போன் மற்றும் கணினி மூலம் பதிவேற்றம் செய்யலாம். வலுவான கொள்கை உருவாக்கவும், நீண்ட கால செயல் திட்டங்களை வகுக்கவும், துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். இந்த பணியினை, மாணவியர் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது வீட்டின் வசதிகள் குறித்த துல்லியமான தகவல்களை, பிழையின்றி பதிவு செய்த பின், பதிவேற்றம் செய்து மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உதவ வேண்டும். வீடு தேடி வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு, சரியான தகவல்களை தெரிவித்து, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தனி தாசில்தார் (மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு) செல்வராஜ், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மாதவி, ரெட்கிராஸ் செயலர் ராஜேஸ்கண்ணன் உட்பட கல்லூரி மாணவிகள், துறை பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார வள மையங்கள், அரசு இ-சேவை மையங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் துறை சார்ந்த அதிகாரிகளை அணுகி, உரிய விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: