நாமக்கல், ஜூலை 21: நாமக்கல் அருகே கூலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(55). இவர் டூவீலரில் ஊர் ஊராக சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். இரவு 10 மணியளவில் வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்ற முருகேசன் பொருட்கள் வாங்கி கொண்டு, டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். கூலிப்பட்டி பைபாசில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு கார் மோதியது. மோதிய வேகத்தில் காரும், டூவீலரும் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில், காருக்கு அடியில் சிக்கி டூவீலர் நசுங்கியது. விபத்தில் படுகாயமடைந்த முருகேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின்பேரில், நாமக்கல் போலீசார் விரைந்து சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
