சென்னை: வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181(1)-இன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முழு சட்டப்பேரவை நிகழ்வும் நேரலை செய்யப்படும் என்று உறுதி செய்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதனிடையே ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆகஸ்ட் 5-ந்தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 6-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக இருக்கும். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்றார். தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
