×

கடையம் அருகே சட்டவிரோதமாக மலைபோல் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகள்

* தொற்று நோய் பரவும் நிலையால் மக்கள் அச்சம்

* மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கடையம் : கடையம் அருகே சாக்கு மூடைகளில் மருத்துவக் கழிவுகள், செல்போன் உடைந்த பாகங்கள், எலக்ட்ரானிக் குப்பைகள், காலி மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் சட்டவிரோத மலைபோல் கொட்டப்பட்டுள்ளன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனைச்சாவடி வழியாக வரும் கனரக வாகனங்கள் சில, பணத்துக்காக கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றை தமிழகத்திற்குள் கொண்டு வந்து தென்காசி மாவட்ட சாலையோரங்களில் கொட்டி செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், கடையம் அருகே அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில், எறப்பனை எதிரேயுள்ள அதிக பனை மரங்கள் நிறைந்த பகுதியில் நூற்றுக்கணக்கான மூடைகளில் மருத்துவக் கழிவுகள், செல்போன் உடைந்த பாகங்கள், எலக்ட்ரானிக் குப்பைகள், காலி மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் சட்டவிரோத மலைபோல் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழை பெய்தால் இந்த மருத்துவ கழிவுகள் அருகிலுள்ள ஆற்றில் கலந்து சுற்றுச்சூழல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி கிளட்ஸன் ஜோஸ், கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். புளியரை சோதனைச் சாவடி வழியாக இரவு நேரத்தில் வந்த கனரக வாகனங்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். மர்ம நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எல்லை வழியாகப் பயணிக்கும் நிலையில், சில ஓட்டுநர்கள் பண ஆசையில் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து வருவதாக உள்ளூர் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர். இச்சம்பவம் தென்காசி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Kerala ,Kadayam ,
× RELATED நண்பன் இறந்து விட்டதால் பிளஸ் 2 மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது