×

கழிவறையில் தூக்குப்போட்டு திரிபுரா டிஜிபி தற்கொலை: அலுவலகத்திலேயே நடந்த சோகம்

 

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு மாநில காவல் துறை தலைவராக இருந்த அமிதாப் ரஞ்சனுக்குப் பிறகு, 2025 கடந்த மே 2025ல் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் அனுராக் தன்கர். 1994ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், சிபிஐ அதிகாரியாகவும், திரிபுரா மாநில புலனாய்வுப் பிரிவு தலைவராகவும் பணியாற்றியவர். இந்நிலையில், அகர்தலாவில் உள்ள காவல் தலைமையகத்தில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அனுராக் தன்கர், தனது அலுவலகக் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இன்னும் 11 மாதங்களில் ஓய்வுபெறவிருந்த அவர் தூக்கில் தொங்கியதை கண்டதும் உடனடியாக அகர்தலாவில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இது குறித்து கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனை மருத்துவர் பிரதீப் கவுமிக் கூறுகையில், “அவர் மதியம் 12 மணிக்கு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அப்போது அவருக்கு நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் உட்பட உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சிபிஆர் மூலம் 40 நிமிடங்களுக்கும் மேலாக நாங்கள் முயன்றோம். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

அனுராக் தன்கர் உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்கான அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் காவல்துறை தலைவர் ஒருவரே தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் மணிக் சாஹா, தலைமைச் செயலாளர் ஜே.கே. சின்ஹா ​​மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்றனா். டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. அவரது இறப்பு தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை செய்து கொண்ட அனுராக் தன்கருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

* நீதி விசாரணை தேவை

திரிபுரா எதிர்க்கட்சித் தலைவர் ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில், ’ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்துகொள்வது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையை வெளிப்படுத்துகிறது. இறப்புக்கான உண்மையான காரணத்தையும், அதற்கான பின்னணியையும் அறிய நாங்கள் நீதி விசாரணை கோருகிறோம்’ என்றார்.

Tags : Tripura ,DGP ,Agartala ,BJP ,Amitabh Ranjan ,Anurag Dhankhar ,
× RELATED பரந்தூர் விமானநிலைய திட்டத்தை...