1. ஆடி மாதமும் தட்சிணாயன புண்ணிய காலமும்
ஆடி மாதம் என்பது சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமாகும். இக்காலம் தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது.ஆன்மிக ரீதியாக, உலகைக் காக்கும் அன்னை பராசக்தியை வழிபட இது மிக உகந்த நேரமாகும். தேவர்கள் தங்களின் இரவு பொழுதில் விழித்திருந்து அம்பாளை பூஜிப்பதாக ஐதீகம். எனவேதான் இக்காலத்தில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்து, முழுக்க முழுக்க ஆன்மிக வழிபாட்டிற்கு நம் முன்னோர்கள் முக்கியத்துவம் அளித்தனர். இயற்கை செழிக்கும் இம்மாதத்தில், அம்மனை வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும். ஆடி மாதத்தின் சிறப்பான அம்மன் வழிபாட்டைப் பற்றியும், ஆடி மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும்,
இந்த முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண்போம்.
2. ஆன்மிகத்தின் அடையாளம் கடக ராசி
பன்னிரண்டு ராசிகளில் நான்காவது ராசி கடக ராசி நீர் தத்துவம் கொண்ட ராசியாகும். ராசிக்கு அதிபதியாக இருப்பவர் சந்திர பகவான். தேவர்களின் குருவான குரு பகவான் உச்சம் பெறும் புண்ணிய ராசியும் இதுவே. நீர் என்பது உயிர்களின் ஆதாரம். நம் உடலில் பெரும்பகுதி நீரால் ஆனது. கடல், ஆறு, குளம், மழை என அனைத்தும் உயிர்களை வாழ வைக் கின்றன. அதுபோலவே, கடக ராசி மனதின் ஆழத்தையும், உணர்வுகளின் பெருக்கையும் குறிக்கிறது. காலச்சக்கரத்தின் நான்காம் இடமான கடகம் தாய் ஸ்தானத்தைக் குறிக்கிறது. அதனால்தான் ஆடியில் அம்மன் கோயிலில் (தாய் தெய்வம்) அத்தனை விசேஷம்.
3. நீரின் மகத்துவத்தை உணர்த்தும் மாதம்
ஆடி மாதத்தில் இயற்கையும் ஒரு புதிய பருவ மாற்றத்தைச் சந்திக்கிறது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிகரிக்கிறது. நிலத்தடி நீர் வளம் பெருகுகிறது. ஆறுகள், குளங்கள் நிரம்பத் தொடங்குகின்றன. எனவே இந்த மாதம் நீரின் மகத்துவத்தை உணர்த்தும் மாதமாகப் போற்றப்படுகிறது. அதனால் தான் ஆடி மாதத்தில் நீரை வணங்கும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. ஆடி பெருக்கு நாளில் காவிரி உள்ளிட்ட புனித நதிகளை வழிபடுவது, நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்துவது, இயற் கையைப் போற்றுவது போன்ற மரபுகள் உருவாயின. “நீர் இல்லாமல் உயிர் இல்லை” என்ற உண்மையை சமுதாயத்திற்கு நினைவூட்டும் திரு விழாவாகவே ஆடி பெருக்கு விளங்குகிறது.
4. தாயும் நீரும் ஒரே தத்துவத்தின் இரு வடிவங்கள்
அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். மாரியம்மன், காளியம்மன், துர்க்கை, பத்ரகாளி, அங்காளம்மன், எல்லையம்மன் போன்ற சக்தி வடிவங் களுக்கு இந்த மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காரணம், சக்தியே உலகைப் படைத்து, காத்து, வளர்க்கும் தாயாக விளங்குகிறாள். உயிர்களை வளர்ப்பது நீர்; உலகத்தை வளர்ப்பது தாய். எனவே தாயையும் நீரையும் ஒரே தத்துவத்தின் இரு வடிவங்களாக நம் முன்னோர்கள் கண்டனர். தாயின் கருவறையில் குழந்தை வளர்வதும் நீரில்தான். விதை முளைப்பதும் நீரால்தான். பயிர் செழிப்பதும் நீரால்தான். எனவே நீர் – தாய் – சந்திரன் – கடக ராசி – அம்மன் ஆகிய ஐந்தும் ஒரே ஆன்மிகச் சங்கி லியின் வளையங்களாகப் பார்க்கப்படுகின்றன.
5. ஆடியும் ஆன்மிகமும்
கடக ராசி என்பது வெறும் ஜோதிட அடையாளம் மட்டுமல்ல. அது தாய்மையின் மென்மை, சந்திரனின் மன அமைதி, குருவின் ஞானம், நீரின் உயிர்த்தன்மை, அம்மனின் அருள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே தாங்கி நிற்கும் புனிதமான ராசியாக விளங்குகிறது. அதனால்தான் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதம், சக்தி வழிபாட்டிற்கும், நீர் வழி பாட்டிற்கும், ஆன்மிக விழிப்புணர்விற்கும் மிகச் சிறந்த மாதமாக நம் சான்றோர்களால் போற்றப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி விரதம் இருப்பதும், ஆடி செவ்வாய் பூஜைகள் செய்வதும், ஆடி பெருக்கன்று நதி களை வணங்குவதும், மழை வளம், உணவு வளம், குடும்ப வளம், மன அமைதி ஆகிய அனைத்தையும் வேண்டி செய்யப்படும் வழிபாடுகளாகும்.
6. ஆடி மாதத்தில் உள்ள முக்கியமான பண்டிகைகள்
ஆடி மாதம் முழுவதுமே ஆன்மிகத் திருவிழாக்களின் சங்கமமாகும். இம் மாதத்தில் வரும் ஆடிப் பெருக்கு (ஆடி 18) காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், வாழ்வாதாரம் பெருகவும் கொண்டாடப்படுகிறது. அம்மன் தவமிருந்து சிவனை அடைந்த தினமான ஆடிப் பூரம் வளைகாப்பு திருவிழாவாக அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், குடும்ப நலம் காக்க மாரியம்மனுக்குக் கூழ்வார்த்தல், தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி வளர்த்தல் போன்ற வழி பாடுகள் இம்மாதத்தில் பிரசித்தி பெற்றவை. மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும் வரலட்சுமி விரதமும் இந்த ஆடி மாதத்தில் வரும் முக்கிய பண்டிகையாகும். இவை அனைத்தும் பக்தி நெறியை வளர்க்கின்றன.
7. ஆடிக் கிருத்திகை
ஆடிக் கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக இருந்தாலும், இது அம்மன் கோயில்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிவபெருமான் அளித்த வரத்தின்படி, ஆடி கிருத்திகை வழி பாட்டிற்குத் தனி மகத்துவம் உண்டு. சக்தியின் வடிவான அம்மன் கோயில்களில் இந்நாளில் முருகப் பெருமானுக்கும், அன்னை பராசக்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காவடி எடுத்தல், பால்குடம் சுமத்தல் போன்ற வழிபாடுகள் மூலம் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவர். அன்னை மற்றும் அவளின் மைந்தனான கந்தன் இருவரின் அருளையும் ஒரே நாளில் பெற்றுத் தரும் உன்னதமான நாளாக ஆடி கிருத்திகை திகழ்கிறது.
8. ஆடி வெள்ளி
ஆடி மாதத்தில் பொதுவாக நான்கு அல்லது ஐந்து வெள்ளிக்கிழமைகள் வரும்:
முதல் வெள்ளி: இச்சை சக்தியான துர்க்கையை வேண்டி, செல்வ வளம் பெருக வழிபடப்படுகிறது.
இரண்டாம் வெள்ளி: ஞான சக்தியான சரஸ்வதியைக் குறித்து, கல்வி மற்றும் புத்தி கூர்மைக்காக பூஜிப்பர்.
மூன்றாம் வெள்ளி: கிரியா சக்தியான லட்சுமியை வேண்டி, சகல சௌபாக் கியங்களும் பெற வழிபடப்படுகிறது.
நான்காம் வெள்ளி: தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்ப ஒற்றுமைக்காகவும் கோலமிட்டு, சர்க்கரைப் பொங்கல் படைத்து அம்மனை வணங்குவர். ஐந்தாம் வெள்ளி (இருந்தால்): இது ‘தவசு வெள்ளி’ எனப்படும். அன்று கடம் புறப்பாடு மற்றும் அம்மனின் விஸ்வரூப தரிசனம் கண்டுவழிபட சகல தோஷங்களும் நீங்கும்.
9. ஆடியில் திருவிளக்கு பூஜை
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டாக இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை (லட்சுமி பூஜை) மிக உகந்த வழிபாடாகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றும் ஆன்மிகப் பயிற்சியாகும். இந்த உலகில் இருள் இயற்கை யானது; ஆனால், ஒளி ஏற்றப்பட வேண்டும். அதுபோல மனிதனின் மனதில் அறியாமை, பயம், கவலை, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை இயல்பாக உருவாகின்றன. அவற்றை அகற்றுவது இறை நம்பிக்கையும், ஞானமும், பக்தியும் ஆகும். அந்த ஞானத்தின் அடையாளமாகவே தீபம் போற்றப்படுகிறது.
10. தீபத்திற்கு உயர்ந்த இடம்
வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் அனைத்திலும் தீபத்திற்கு உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. “தமசோ மா ஜ்யோதிர்கமய” – “இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல்” என்ற உபநிஷத் பிரார்த்தனையின் கருத்தை விளக்குப் பூஜை நமக்கு தினமும் நினைவூட்டுகிறது. ஒரு சிறிய தீபம் கூட பெரிய இருளை அகற்றுகிறது. அதுபோல இறைவன் மீது உள்ள சிறிய நம்பிக்கையே வாழ்க்கையின் மிகப்பெரிய துன்பங்களையும் கடக்க உதவுகிறது.
ஆடி மாதம் சக்தியின் மாதமாகக் கருதப்படுகிறது. சக்தியின் அருள் இல்லாமல் எந்தச் செயலும் நிறைவேறாது. விளக்கில் ஏற்றப்படும் தீப ஜோதி, மகாலட்சுமியின் சந்நதியாகவும், அன்னை பராசக்தியின் அருளொளியாகவும் கருதப்படுகிறது. விளக்குப் பூஜையின் மற்றொரு சிறப்பு, அது தனிநபர் வழிபாட்டை குடும்ப வழிபாடாக மாற்றுகிறது. வீட்டில் உள்ள அனைவரும் தீபத்தின் முன் அமர்ந்து இறைநாமம் சொல்லும்போது, வீட்டின் சூழல் அமைதியாகிறது. குழந்தைகளுக்கும் இறை நம்பிக்கை இயல்பாக உருவாகிறது. அன்பும், ஒற்றுமையும் வளரும்.
11. விளக்கின் தத்துவம்
எண்ணெய் அல்லது நெய் நம் மனத்தில் இருக்கும் வாசனைகளையும் கர்மங்களையும் குறிக்கிறது. திரி நமது உயிரையும், சுடர் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. திரி எரிந்து ஒளி தருவது போல, மனிதனும் தன்னலத்தைத் தியாகம் செய்து பிறருக்கு நன்மை செய்யும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம். ஆடி மாதத்தில் பெண்கள் எலுமிச்சை விளக்கு, மாவிளக்கு, அகல்விளக்கு போன்றவற்றை ஏற்றி வழிபடுவதும் ஒரு சிறந்த மரபாகும். இதன் மூலம் குடும்ப நலம், கணவன் ஆயுள், குழந்தைகளின் முன்னேற்றம், மன அமைதி, ஆரோக்கியம், செல்வ வளம் ஆகியவற்றை வேண்டுகின்றனர். குறிப்பாக திருமணத் தடை நீங் கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும் விளக்குப் பூஜை மேற்கொள்ளும் வழக்கம் பல இடங்களில் காணப்படுகிறது.
12. ஆடிப் பட்டம் தேடி விதை
ஆடி மாதம் விவசாயிகளுக்கு நம்பிக்கையின் மாதமாகவும் கருதப்பட்டது. மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலங்கள் உயிர் பெறும் காலம் இதுவே. உழவனின் கலப்பை மீண்டும் நிலத்தைத் தொடும் காலம். விதை கள் மண்ணில் புதைக்கப்பட்டாலும், சில மாதங்களில் நூற்றுக்கணக்கான மடங்கு விளைச்சலாகத் திரும்ப வரும் என்றநம்பிக்கையின் மாதம் ஆடி. “ஆடிப்பட்டம்” என்றால் ஆடி மாதத்தில் தொடங்கும் சாகுபடிப் பருவம். எனவே, “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பதன் பொருள், ஆடி மாதத்தில் விதைப்பதற்குத் தேவையான விதைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள் என்பதாகும்.
இந்தப் பழமொழி தோன்றியதற்கு இயற்கை தான் காரணம். ஆடி மாதத்தில் தென்மேற்குப் பருவமழை பல பகுதிகளில் நிலத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. நிலம் உழுவதற்கு ஏற்றதாக மாறுகிறது. குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் ஆகியவற்றில் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்குகிறது. அதனால் அடுத்த மாதங்களான ஆவணி, புரட்டாசி காலங்களில் பயிர்கள் நன்கு வளர்வதற்கான அடித்தளம் ஆடி மாதத்திலேயே அமைந்து விடுகிறது. எனவே, ஆடி மாதம் விவசாயிகளும் கொண்டாடும் மாதமாக அமைந்திருக்கிறது.
13. ஆடிப் பண்டிகை
ஆடி மாதத்தின் முதல் நாளும், கடைசி நாளும் பலகிராமங்களில் பண்டிகை நாளாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் அதிகாலையிலேயே நீராடி, புத்தாடை அணிந்து, வீடுகளைச் சுத்தம் செய்து, வாசலில் கோலம் இட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, இறைவனை வழிபடுவார்கள். அம்மன் கோயில் களிலும், பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிராமப்புறங்களில் ஆடிப் பண்டிகை ஒரு குடும்ப விழாவாக மட்டுமல்ல, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழாவாகவும் விளங்குகிறது. உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆடி மாதத்தின் கடைசி நாளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த நாளோடு தட்சிணாயனத்தின் முதல் மாதம் நிறைவடைந்து, அடுத்த மாதமான ஆவணியை வரவேற்கும் மன நிலையுடன் மக்கள் இறைவனை வழிபடுகின்றனர்.
14. ஆடிப்பால்
புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு ஆடி மாதம் மிகவும் முக்கியம். புதுமாப்பிள்ளையை மனைவியின் வீட்டிற்கு அழைத்து வந்து, பால், பழம், இனிப்புகள் வைத்து மரியாதை செய்வதை “ஆடிப்பால்வைப்பது” என்று அழைக்கிறார்கள். இது மாப்பிள்ளையை அன்போடும் மரியாதையோடும் வரவேற்கும் தமிழர் பாரம்பரியமாகும்.அதேபோல், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதத்தில் “ஆடிச் சீர்” செய்வதும் ஒரு முக்கிய வழக்கம்.
பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் புத்தாடைகள், இனிப்புகள், பழங்கள், மஞ்சள், குங்குமம், தேங்காய், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி வாழ்த்துவார்கள். குறிப்பாக ஆடிப்பெருக்கு (ஆடி 18) அன்று இந்தச் சீர் மிகவும் சிறப்பாக நடைபெறும். அன்று நதிக்கரைகளில் வழிபாடு செய்து, காவிரி உள்ளிட்ட ஆறுகளுக்கு நன்றியறிதல் செலுத்தி, குடும்ப வளமும், தம்பதிகளின் நலமும், சந்ததி விருத்தியும் வேண்டி இறை வனைப் பிரார்த்திப்பார்கள். பல கிராமங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
15. ஆடி மாதமும் கிராமக் கோயில் உற்சவங்களும்
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அம்மன் கோயில்கள், காவல் தெய்வக் கோயில்கள் மற்றும் ஊர்த் தெய்வ ஆலயங்களில் ஆடி மாதம் மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்தின் வசதிக்கும், மரபுக்கும் ஏற்ப ஒரு நாள், மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள், பத்து நாள் என பல்வேறு கால அளவுகளில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் அபிஷேகம், அலங்காரம், வீதி உலா, கலை நிகழ்ச்சிகள், பக்தி இசை, அன்னதானம், மஞ்சள் நீராட்டு, தேரோட்டம், பூப்பல்லக்கு, தீமிதி, பால்குடம், காவடி, கரகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அந்தக் கிராமத்தில் வாழ்பவர்கள் தங்களுடைய சொந்த விழாவாகவே இதைக் கருதுகின்றனர். வெளியூரில் வாழ்பவர்கள்கூட ஆடி உற்சவத்திற்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருவது இன்று வரை தொடரும் அழகிய மரபாகும்.
16. இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் ஒன்றிணையும் விழா
பொருளாதார வசதி உள்ளவர்கள் உற்சவச் செலவுகளுக்கு நன்கொடை வழங்குகின்றனர். இளைஞர்கள் ஒழுங்கு ஏற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். பெண்கள் மாவிளக்கு, கும்மி, கோலாட்டம், பக்திப் பாடல்கள் போன்ற வற்றில் பங்கேற்கின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களால் இயன்ற சேவையைச் செய்து, உற்சவத்தை வெற்றிகரமாக நடத்துகின்றனர்.பெரிய நகரங்களில் கோயில் விழாக்களைப் பார்வையாளர்களாகக் காண்பவர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் நடைபெறும் ஆடி உற்சவங்களில் பார்வையாளர்கள் அனைவரும் பங்கேற்பாளர்களே.
அதுவே கிராமக் கோயில் உற்சவங்களின் உயிரோட்டமும், தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்புமாகும்.ஆடி மாத கிராமக் கோயில் உற்சவங்கள், இறை வழிபாட்டை மட்டுமல்ல; சமூக ஒற்றுமை, உறவுமுறை, பண்பாட்டு மரபு, நாட்டுப்புறக் கலைகள் மற்றும் தலை முறைகளாகத் தொடரும் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும் மகத்தான விழாக்களாகத் திகழ்கின்றன.
17. ஆடிக் கூழுக்கு என்ன விசேஷம்?
ஆடி மாதத்தில் அம்மன் கோயில் திருவிழா என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஆடிக்கூழ். தமிழகம் முழுவதும் மாரியம்மன், காளியம் மன், அங்காளம்மன், திரௌபதியம்மன் உள்ளிட்ட சக்தி ஆலயங்களில் ஆடிக்கூழ் காய்ச்சி அம்மனுக்குப் படைத்து, பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் மரபாகும். ஆடிக்கூழ் சமத்துவம், பகிர்வு, நன்றியுணர்வு, ஆரோக்கியம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் தெய்வீகப் பிரசாதமாகும். பழங்காலத்தில் ஆடி மாதம் விவசாயப் பணிகள் தொடங்கும் காலமாக இருந்தது.
வயல்களில் உழைக்கும் மக்களுக்கு நீண்ட நேரம் பசியைத் தாங்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும், எளிதில் செரிமானமாகும் உணவு தேவைப்பட்டது. கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் கூழ் அதற்குச் சிறந்த உணவாக இருந்தது. அதனால் கிராம மக்கள் முதலில் அதை அம்மனுக்குப் படைத்து, பின்னர் அனைவரும் ஒன்றாக உண்டு மகிழ்ந்தனர். ஆடிக்கூழ் அம்மனின் அருள், அன்னதானத்தின் மகிமை, சமூக ஒற்றுமையின் செய்தி, உடல்நலக் காப்பு, பக்தியின் வெளிப்பாடு ஆகிய ஐந்தையும் ஒருங்கே உணர்த்தும் புனிதப் பிரசாதமாகும்.
18. ஆடி கூழ் தத்துவம்
ஆடிக்கூழின் மற்றொரு சிறப்பு, பாகுபாடற்ற பகிர்வு ஆகும். செல்வந்தரா, ஏழையா, எந்தக் குலம், எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அம்மன் சந்நதியில் அனைவருக்கும் ஒரே பிரசாதமே வழங்கப்படுகிறது. இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதைக் கற்றுத் தரும் அழகிய மரபு இது. இதற்கு ஆழமான ஆன்மிகத் தத்துவமும் உள்ளது. பல தானியங்கள் ஒன்றிணைந்து சுவையான கூழாக மாறுவது போல, பல்வேறு குணமும் பின்னணியும் கொண்ட மனிதர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
தனித்தனியாக இருக்கும் தானியங்களுக்கு இருக்கும் மதிப்பு ஒன்று; ஒன்றிணைந்தபோது உருவாகும் நிறைவு வேறு. அதுபோலவே, சமூக ஒற்றுமையே ஒரு கிராமத்தின் உண் மையான வலிமை என்பதை ஆடிக்கூழ் உணர்த்துகிறது. பசியுடன் வருபவர் யாராக இருந்தாலும் அவருக்கு உணவு அளிப்பதே அம்மன் வழிபாட்டின் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் உடல்நலப் பிரச்னைகள் அதிகரிக்கக்கூடிய இந்த நேரத்தில், உடலுக்குக் குளிர்ச்சியும் வலிமையும் தரும் சிறுதானிய உணவைப் பிரசாதமாக வழங்கிய நம் முன்னோர்களின் வாழ்க்கை ஞானமும் இதில் வெளிப்படுகிறது.
19. அம்மனும் வேப்பிலையும் – ஏன் பிரிக்க முடியாத தொடர்பு?
அம்மன் வழிபாட்டில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக வேப்பிலை முக்கிய இடம் பெறுகிறது. மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன் போன்ற சக்தி ஆலயங்களில் அம்மனுக்கு வேப்பிலை அலங்காரம் செய்வது, வேப்பிலையால் தோரணம் கட்டுவது, பக்தர்கள் கையில் வேப்பிலைக் கொத்து ஏந்துவது, வேப்பிலை ஆடை அணிவது போன்ற மரபுகள் இன்றும் தொடர் கின்றன. அதனால்தான் கிராமங்களில் அம்மனை அன்போடு “வேப்பிலைக்காரி”, “வேப்பிலையம்மன்” என்றும் அழைக்கிறார்கள். இதற்குப் பின்னால் ஆன்மிகம், மருத்துவம், சுற்றுச்சூழல், சமூக நலம் ஆகிய அனைத்தையும் இணைத்த ஆழமான சிந்தனை இருக்கிறது.
மாரியம்மன் வழிபாடு பெரும்பாலும் அம்மை, வைசூரி, சின்னம்மை போன்ற தொற்று நோய்களுடன் தொடர்புடையதாக இருந்தது. அந்தக் காலங்களில் மக்கள், நோய் பரவாமல் இருக்க வீடுகளில் வேப்பிலையைத் தொங்கவிட்டனர். நோயால் பாதிக்கப் பட்டவர்களின் அருகிலும் வேப்பிலையை வைத்தனர். இயற்கையாகவே கிருமி எதிர்ப்புத் தன்மை கொண்டதாகக் கருதப்பட்ட வேப்பமரம், ஆரோக்கியத்தின் சின்னமாக விளங்கியது.
20. தத்துவம் என்ன?
நோய்களை நீக்கி மக்களைக் காக்கும் அன்னையாக அம்மனை வணங்கும் போது, அவளது கருணையின் அடையாளமாக வேப்பிலையும் இணைந்தது. வேப்பிலையின் கசப்புச் சுவை, வாழ்க்கையில் உள்ள துன்பங்களையும், நோய்களையும், தீயசக்திகளையும் நீக்கும் சக்தியைக் குறிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
வீட்டின் வாசலில் வேப்பிலைத் தோரணம்கட்டுவது, தீய தாக்கங்கள் நுழையாமல் இருக்க வேண்டும் என்ற மங்கள எண்ணத்தின் வெளிப்பாடாகும். வேப்பிலையை வாயில் போட்டால் முதலில் கசக்கும். ஆனால் அந்தக் கசப்பே உடலுக்கு நன்மை தருகிறது. அதுபோல, வாழ்க்கையில் வரும் சோதனைகள் அந்த நேரத்தில் கசப்பாக இருந்தாலும், அவை நம்மை பக்குவப்படுத்தி உயர்த்துகின்றன. இந்த வாழ்க்கைத் தத்துவத்தையும் வேப்பிலை அமைதியாகக் கற்றுத் தருகிறது. வேப்பமரம் ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும்.
வெயிலையும் வறட்சியையும் தாங்கி நிற்கும் அதன் இயல்பு, எந்தச் சூழ்நிலையிலும் தன் மக்களைக் காக்கும் அன்னையின் கருணையை நினைவூட்டுகிறது. நம் முன்னோர்கள் மருத்துவத்தையும், ஆன்மிகத்தையும் எதி ரெதிரானவை என்று பார்க்கவில்லை; ஒன்றுக்கொன்று துணை நிற்பவையாகவே கருதினர். அதனால், உடலைப் பாதுகாக்கும் வேப்பிலையை, உயிர்களைக் காக்கும் அம்மன் வழிபாட்டுடன் இணைத்தனர். வழிபாட்டின் மூலம் மக்கள் இயற்கை மருத்துவத்தின் பயன்களையும் மறக்காமல் பின்பற்றினர்.
21. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் புட்டு
ஆடி மாதத்தில் பல அம்மன் கோயில்களில் புட்டு நைவேத்தியமாகப் படைக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. சக்தி ஆலயங்களில் ஆடிக்கூழுடன் சேர்த்து புட்டும் படைக்கப்படுகிறது. சில தலங்களில் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும், சில இடங்களில் ஆடி பூரம் அல்லது ஆண்டு உற்சவ நாளிலும் புட்டுப் படையல் நடை பெறுகிறது.புட்டு என்பது அரிசி மாவு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் எளிமையான, சத்தான உணவாகும்.
இது இனிமையையும், வளமையையும், மங்களத்தையும் குறிக்கிறது. எண்ணற்ற அரிசித் துகள்கள் ஒன்றிணைந்து புட்டாக உருவாகுவது போல, குடும்ப உறுப்பினர்களும், ஊர் மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும். வெல்லத்தின் இனிமை குடும்ப வாழ்வில் அன்பும் இனிமையும் பெருக வேண்டும் என்பதையும், தேங்காய் முழுமையையும் மங்களத்தையும் உணர்த்துகிறது.
ஆடி மாதம் விவசாயப் பணிகள் தொடங்கும் காலம். புதிய பருவம் வளமாக அமைய வேண்டும், வீட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடாது, தானியக் களஞ்சியம் நிரம்பியிருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அம்மனுக்குப் புட்டு படைத்து வழிபட்டனர். சில பகுதிகளில், புட்டை உருண்டைகளாகச் செய்து அம் மனுக்குப் படைத்து, குழந்தை களின் ஆரோக்கியம், குடும்ப வளம், நோய் நிவாரணம் ஆகியவற்றை வேண்டியும்வழிபடுகின்றனர்.
22. கிராமத்து அம்மன் கோயில்களின் தோற்றக் கதைகள்
தமிழகத்தின் சில கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலுக்குப் பின்னால் ஒரு தனித்துவமான வரலாறும், உருக்கமான கதையும் இருக்கும். இந்தக் கதைகள் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல; அந்த ஊரின் வரலாறு, மக்களின் வாழ்க்கை, அவர்கள் அனுபவித்த துன்பங்கள், நம்பிக்கைகள், சமூக நினைவுகள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளன. பல கிராமங்களில் அம்மனாக வழிபடப்படுபவர், அந்த ஊரில் வாழ்ந்த ஒரு உயர்ந்த பண்புடைய பெண்ணாகவே கூறப்படுகிறார். கற்பு, தியாகம், கருணை, நீதிக்காகப் போராடிய மனப்பாங்கு, ஊர் மக்களைக் காத்த அர்ப்பணிப்பு போன்ற சிறந்த குணங்களால் மக்களின் மனதில் இடம்பிடித்த பெண்கள், அவர்கள் மறைந்த பிறகு தெய்வமாகப் போற்றப்பட்டதாக ஊர்க் கதைகள் கூறுகின்றன.
23. பெண்மையைத் தெய்வமாகப் போற்றிய தமிழர் மரபு
சில இடங்களில் அநீதிக்கு ஆளான பெண், தன் நேர்மையால் தெய்வ நிலையை அடைந்ததாகக் கூறப்படுகிறது. சில ஊர்களில் தொற்றுநோயின் போது மக்களைக் காப்பாற்றிய பெண்ணின் நினைவாக ஆலயம் எழுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. வேறு சில தலங்களில், கனவில் தோன்றி “இங்கே எனக்கு ஆலயம் அமையுங்கள்” என்று அம்மன் அருளியதாக தலைமுறை தலைமுறையாகக் கூறப்படும் மரபுகளும் உள்ளன.
இந்தக் கதைகள் அனைத்தையும் வரலாற்றுச் சான்றுகளாக மட்டுமே பார்க்க வேண்டியதில்லை. ஒரு நல்ல மனிதரை, குறிப்பாக ஒரு நல்ல பெண்ணை, தெய்வ நிலைக்கு உயர்த்திப் போற்றும் தமிழர் பண்பாட்டின் ஆழமான வெளிப்பாடாகவும் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்மையைத் தாயாகவும், பாதுகாப்பின் வடிவமாகவும், சக்தியின் உருவமாகவும் கண்ட சமுதாயத்தின் மனநிலையே இந்த அம்மன் வழிபாட்டின் அடிப்படையாகும்.
24. முளைப்பாரி எடுத்தல்
ஆடி மாத அம்மன் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான சடங்குகளில் ஒன்று முளைப்பாரி எடுத்தல். முளைப்பாரி என்பது நவதானியங்கள் அல்லது பல்வேறு தானியங்களை ஒரு மண்பானையில் அல்லது கூடை போன்ற பாத்திரத்தில் விதைத்து, சில நாட்கள் நீர் தெளித்து முளைக்கச் செய்வதாகும். விழா நாளில் அந்தப் பசுமையாக வளர்ந்த முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து, மேளதாளம், கும்மிப்பாட்டு, பக்திப் பாடல் களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்குச் சமர்ப்பிப்பார்கள். முளைப்பாரி என்பது வெறும் சடங்கு அல்ல. ஒரு சிறிய விதை முளைத்து செழித்து வளர்வதைப் போல, மனித வாழ்க்கையும் இறையருளால் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே இதன் தத்துவம்.
25. பூக்குழி இறங்குதல்
ஆடி மாத அம்மன் திருவிழாக்களில் மிகவும் பரவலாகக் காணப்படும் நேர்த்திக்கடன் வழிபாடுகளில் ஒன்று பூக்குழி இறங்குதல். இதனை சில பகுதிகளில் தீமிதி, அக்னி நடை, பூகுழி இறங்குதல் என்றும் அழைக்கின்றனர். அம்மன் கோயில் முன்பாக விறகுகளை எரித்து, சிவந்த நெருப்புத் தணல்களால் ஒரு நீண்ட அக்னிப் பாதை அமைக்கப்படுகிறது. விரதம் இருந்து, மனமும் உடலும் தூய்மையுடன் வழிபாடு செய்த பக்தர்கள், அம்மனை தியானித்தபடி அந்த அக்னிப் பாதையில் நடந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். “பூக்குழி” என்ற பெயர் மிகவும் பொருள் பொதிந்தது. நெருப்பின் மீது நடந்தாலும், பக்தனின் மனதில் அது பூக்களால் விரிக்கப்பட்ட பாதையாக உணரப்படுகிறது என்பதே இதன் உட் பொருள். இறைவன் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவருக்கு துன்பமும் இன்பமாக மாறும் என்பதை இந்தப் பெயரே உணர்த்துகிறது.
26. எளிமையான தெய்வம் அம்மன்
இந்து சமயத்தில் எளிமையாக வழிபடப்படும் தெய்வங்களில் முதன்மை யானவர் விநாயகர். அதேபோல, அம்மனும் மக்களோடு மக்களாக வாழும் தாய்த் தெய்வம். பெரிய ஆகமக் கோயில்களில் மட்டுமல்ல; ஒரு மரத் தடியில், ஒரு கல்லில், ஒரு புற்றில், ஒரு சிறிய மண்டபத்தில் கூட அம் மனை பிரதிஷ்டை செய்து வழிபடும் மரபு தமிழகமெங்கும் காணப்படுகிறது. சில கோயில்களில் உருவமில்லாத அம்மன் உண்டு.. இத்தகைய திருத்தலங்களில் மூலவருக்குச் சிலை வடிவம் இருக்காது. பக்தர்கள் அந்தச் சுயம்பு பீடத்தின் மீதே சந்தனம், குங்குமம் போன்றவற்றை இட்டு, முகம் மற்றும் திருவுருவமாக அலங்கரித்து வழிபடுவார்கள். முண்டகக்கண்ணி அம்மன் கோவில், மயிலாப்பூர் கோயிலில் மூலவர் சுயம்புவாக காட்சியளிக்கிறார்.
27. இத்தனைப் பெயர்களா?
அம்மனின் மற்றொரு தனிச்சிறப்பு, மக்கள் அன்போடு சூட்டிய பெயர்களை எல்லாம் ஏற்றுக் கொள்வதுதான். ஆகமங்களில் உள்ள திருநாமங்கள் மட்டுமல்லாமல், அந்த ஊரின் வரலாறு, மக்கள் அனுபவம், தொழில், இயற்கை, பக்தி ஆகியவற்றின் அடிப்படையில் உருவான பெயர்களாலும் அம்மன் அழைக்கப்படுகிறாள். அதனால் தான் நாம் தண்டுமாரியம்மன், ஏழை மாரியம்மன், முத்துமாரியம்மன், கருமாரியம்மன், பூமாரியம்மன், எல்லையம்மன், செல்லியம்மன், பேச்சியம்மன், இசக்கியம்மன், அங்காளம்மன், பத்திரகாளியம்மன், பொன்னியம்மன், திரௌபதியம்மன், ரேணுகாதேவி, கன்னியம்மன், பிடாரியம்மன், உச்சிமாகாளியம்மன், வடிவுடையம்மன், கோமதி அம்மன், கற்பகாம்பாள், காந்திமதி அம்மன், அபிராமி, அகிலாண்டேஸ்வரி, மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்று எண்ணற்ற திருநாமங்களால் அவளைப் போற்றுகிறோம். பல்வேறு ஊர் களின் உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பல்வேறு பெயர்களில் அருள்புரிகிறாள் என்பதையே இவை உணர்த்துகின்றன.
28. காந்திமதியம்மன்
ஆடி மாதம் கிராமத்து அம்மன் கோயில்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களிலும் சக்தி பீடங்களிலும் அம்பாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் மாதமாகும். திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடி மாதத்தில் காந்திமதி அம்மனுக்கு பிரம்மாண்டமான முறையில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நடத்தப்படுகிறது. அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் மிகச்சிறப்பான நிகழ்வாக நடக்கும்.. இந்த உற்சவத்தின் போது, அம்மனுக்கு வளை யல்கள் அணிவிக்கப்பட்டு, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக் கான பெண்கள் கலந்து கொண்டு மங்கள வாழ்வு, குடும்ப நலம், மகப்பேறு, தீர்க்க சுமங்கலித்துவம் ஆகியவற்றை வேண்டி வழிபடுவர் சிவனும் சக்தியும் பிரிக்க முடியாத தத்துவத்தை இந்தத் திருக்கோயில் எடுத்துரைக்கிறது. ஆடி மாதத்தில் சக்தி வழிபாடு உச்சத்தை அடைவதால், காந்திமதி அம்பாளின் சந்நிதி பக்தர்களால் நிரம்பி வழிகிறது. ஆடி மாதத் தின் கடைசி வெள்ளியன்று காந்திமதி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறும்.
29. சங்கரன்கோவில் ஆடித் தபசு
சங்கரன்கோவில் ஆடித்தபசு தென்பாண்டிய நாட்டின் மிகப்பெரிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாகும். புராணத்தின் படி, கோமதி அம்மன் பரமசிவனைத் தன் கணவராக அடைய கடுமையான தவம் மேற்கொண்டார். அம்பாளின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் சங்கரநாராயணர் திருக்கோலத்தில் காட்சி அளித்தார். இந்த அரிய தரிசனத்தை நினைவுகூறும் விழாவே ஆடித்தபசு. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, தவம் புரியும் கோமதி அம்மனும், சங்கரநாராயணரின் அருள்காட்சியும் பக்தர்களுக்கு அருவிருந்தாக அமையும். விவசாயிகள் புதிய விளைபொருட்களைச் சமர்ப்பித்து, வளமான மழையும் நல்ல விளைச்சலும் அருள வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றனர்.
30. மயிலாப்பூர் கற்பகாம்பாள் ஆடி விழா
சென்னையின் புகழ்பெற்ற சிவத்தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகுகற்பகாம்பாள், ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சக்தி சொரூபிணியாக விளங்குகிறாள். கற்பகாம்பாள் என்ற திருநாமமே, கற்பக விருட்சம்போல பக்தர்கள் நினைத்த வரங்களை வழங்குபவள் என்ற பொருளை உணர்த்துகிறது. ஆடிமாதம் முழுவதும், குறிப்பாக ஆடி வெள்ளிக் கிழமைகளில், கற்பகாம் பாளை தரிசிக்க தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கற்பகாம்பாளுக்கு ஆடிப் பூரத்தில் வளையல் சாற்றுதல், அபிஷேகம் மற்றும் ஆடிப்பூர வளைகாப்பு விழா மிகவும் விமர்சையாக நடைபெறும்.
பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், மங்களப் பொருட்களைச் சமர்ப்பித்து, நீண்ட சுமங்கலி பாக்கியம், குடும்ப நலம், குழந்தைப்பேறு, கல்வி, செல்வ வளம் ஆகியவற்றை வேண்டி வழிபடுகின்றனர். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆடிப் பூரம்”, “காஞ்சி காமாட்சி ஆடி வெள்ளி”, “மதுரை மீனாட்சி ஆடி முளைக்கொட்டு உற்சவம்”, “சமயபுரம் மாரியம்மன் ஆடி திருவிழா”என ஆடி அம்மன் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
எஸ். கோகுலாச்சாரி
