×

திருமால் ஆலயங்களில் ஆடி மாத திருவிழாக்கள்

ஆடி மாதம் என்றாலே பொதுவாக அம்மன் வழிபாடும், சைவக் கோயில்களின் திருவிழாக்களுமே சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், வைணவத்திலும் ஆடி மாதத்திற்கு மிக முக்கிய இடமும் தனித்துவமான ஆன்மிகச் சிறப்பும் உண்டு.தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமாக அமைவதால், இந்த மாதம் முழுவதும் பெருமாள் கோயில்களில் பல்வேறு உற்சவங்கள், விரதங்கள், சிறப்பு திருமஞ்சனங்கள், புறப்பாடுகள், வேதபாராயணங்கள், திவ்யப் பிரபந்த சேவைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசியில் பிரவேசிக்கும் ஆடி மாதமே ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ தொடங்கும் காலமாகும். சாஸ்திரங்களின்படி மார்கழி முதல் ஆனி வரை உத்தராயன காலம் (தேவர்களின் பகல் பொழுது) என்றும், ஆடி முதல் கார்த்திகை/மார்கழி வரை தட்சிணாயன காலம் (தேவர்களின் இரவு பொழுது) என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் (திருக்குடந்தை) ஸ்ரீசாரங்கபாணி சுவாமி கோயில், திரு வெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கோயில், உறையூர் ஸ்ரீஅழகிய மணவாளர் கோயில் போன்ற தொன்மையான திவ்ய தேசங்களில் இந்த உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் தனித்தனியாக அமைந்துள்ளன:

சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில், வடக்கு வாசல் மூடப்பட்டு, தெற்கு வாசல் (தட்சிணாயன வாசல்) வழியாகவே பக்தர்கள் பெருமாளைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.ஜீவாத்மாக்கள் தங்களின் கர்ம வினை களைக் கடந்து, இறைவனின் திருவடியை அடைவதைக் குறிக்கும் தத்துவமாகவே இந்த வாசல்கள் விளங்கு கின்றன. தட்சிணாயன காலம் என்பது பித்ருக்கள் வழிபாட்டிற்கும், இறைவனைத் தியானிப்பதற்கும் உகந்த காலம் என்பதால், இந்தத் தெற்கு வாசல் வழி தரிசனம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

மதுரை அழகர்கோவில் (திருமாலிருஞ்சோலை) ஆடிப் பெருந்திருவிழா உலகப் புகழ்பெற்றது. ஆடி மாத பௌர்ணமியை ஒட்டி நடைபெறும் தேரோட்டம் மிக விசேஷமானது. சித்திரை திருவிழாவிற்குப் பிறகு, அழகர் மலையிலேயே பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடிக் கொண்டாடும் மாபெரும் உற்சவம் இதுவாகும்.ஆடி மாத பதினெட்டாம் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில், அழகர் கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளும், சந்தனம் சாத்துப் படியும் ஆன்மிகச் சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடியவை.

ஆடி மாதத்தைச் சிறப்பிக்கும் திருவிழாக்களில் முதன்மையானது ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழா ஆன்மிக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.ஆடி மாத பூர நட்சத்திரத்தில்தான், ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் பெரியாழ்வாருக்கு மகளாக ஆண்டாள் அவதரித்தாள். பூமிதேவியின் அம்சமாக அவதரித்த கோதை, பெருமாள் மீது கொண்ட எல்லையற்ற காதலால், தனக்காகத் தொடுக்கப்படும் பூமாலைகளைத் தான் முதலில் சூடிப் பார்த்து, கண்ணாடியில் தன் அழகைக் கண்டு ரசித்த பின்பே பெருமாளுக்கு அனுப்பியதால் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று பெயர் பெற்றாள்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி (ரெங்கமன்னார்) ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிப் பூரத் திருவிழா 10 நாட்கள் மிகவிமரிசையாக நடைபெறும்:

ஆடிப் பூர நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆடிப்பூர உற்சவம் பல நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.. தினமும் ஆண்டாள் பல்வேறு அலங்காரங்களிலும், பலவித வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப் பார். வேதபாராயணம், திவ்யப் பிரபந்த சேவை, நாதஸ்வர இசை, மங்கள வாத்தியங்கள், மலர் அலங்காரங்கள் ஆகியவற்றால் நகரமே திருவிழாக் கோலம் காணும்.

இதில் ஐந்தாம் நாள் நடைபெறும் கருட சேவை உற்சவம் முக்கியமான உற்சவமாகும். முன்னதாக சிறிய அன்ன வாகனத்தில் பெரியாழ்வார் எதிர் கொண்டு அழைத்துச் செல்ல, கருட வாகனத்தில் ரெங்கமன்னார் பவனி வருவார். இதனைத் தொடர்ந்து பெரிய அன்ன வாகனத்தில் ஸ்ரீஆண்டாள், கருட வாகனங்களில் பெரிய பெருமாள், ஸ்ரீ னிவாசப் பெருமாள், சுந்தராஜ பெருமாள், திருத்தங்கல் அப்பன் பெருமாள் ஆகியோர் வரிசையாக பவனி வருவர்.

இந்த கருட சேவை(ஆடி 25,ஆகஸ்ட் 10ம் தேதி) விடிய விடிய நடைபெறும். தமிழகமெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் . ஸ்ரீ வில்லிபுத்தூர் நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கும்.. ரத வீதிகளிலும், மாட வீதிகளிலும் பக்தர்களின் ஆடல்களும், பாடல்களும், பக்தி கோஷங் களும் காண்போரை மெய்மறக்கச் செய்யும். இதே உற்சவத்தில் ஒரு நாள் “அரங்க மடி சேவை” எனப்படும் சயன சேவை உற்சவம் அதி அற்புதமாக இருக்கும். ஆண்டாளின் மடி மீது சயன கோலத்தில் ஸ்ரீரெங்கமன்னார் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் விசேஷ வைபவம் வைகுந் தத்திலும் கிடைக்காத கண் கொள்ளாக்காட்சி.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியே ஒன்பதாம் நாள் நடைபெறும் ஆடித் தேரோட்டம் ஆகும்.(14.8.2026) ஸ்ரீ வில்லிபுத்தூர் தேர் தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். அழகிய மர வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த மாபெரும் தேரில், ஆண்டாளும் ரெங்கமன்னாரும் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வரும்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோபாலா…” என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். ஆண்டாள் அவதரித்த மண்ணில், அவளது அவதார நன்னாளில் தேரைத் தரிசிப்பதும், வடம் பிடிப்பதும் பரம சௌக்கியத்தை அளிக்கும்.

ஆண்டாள் தமிழுக்கு அளித்த கொடை முப்பது பாசுரங்கள் கொண்ட திருப் பாவை மற்றும் 143 பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழி. தன் ஆழமான பக்தியை, அகம் சார்ந்த காதல் சுவையுடன், எளிய தமிழில் பாடி, மானிடப் பெண்ணாகப் பிறந்து இறைவனுடன் கலந்தவள் ஆண்டாள்.

“சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவைபாடி அருளவல்ல பல்வளையாய்!”

என்று போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூரும், அங்கு நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவும் வைணவத்தின் பக்திப் பெருக்கின் அடையாளங்கள்.ஆடி மாத ஸ்வாதி நட்சத்திரத்தை ஒட்டி வரும் கருட பஞ்சமி முக்கியத்துவம் வாய்ந்த திருநாளாகும். பொதுவாக ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி அன்று கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது.

புராணங்களின்படி, காஷ்யப முனி வருக்கும் வினதாவுக்கும் மகனாகப் பிறந்தவர் கருடாழ்வார். தன் தாய் வினதா, கத்ரு என்பவளிடம் அடிமையாக இருந்ததை மீட்பதற்காக, தேவலோகம் சென்று இந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தைக் கொண்டு வந்தார். கருடனின் இந்த வீரத்தையும் மாத்ரு பக்தியையும் (தாய் பக்தி) மெச்சிய மகா விஷ்ணு, அவரைத் தனது வாகனமாகவும், தனது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். இந்த விசேஷமான நாள் தான் ‘கருட பஞ்சமி’ என்றுகொண்டாடப்படுகிறது.

இந்நாளில் பெருமாள் கோயில்களில் உள்ள பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வாருக்கு விசேஷ அபிஷேகங்கள், அர்ச்சனைகள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரங்கள் நடைபெறும். கருடனுக்கு அமிர்த கலசம் போன்ற வடிவமுடைய ‘மண்டை வெல்லக் கொழுக்கட்டை’ அல்லது இனிப்புக் கொழுக்கட்டை, பாயசம், வடை போன்றவற்றை நிவேதனம் செய்வது வழக்கம்.

‘கருட கவசம்’ அல்லது ‘கருட தண்டகம்’ பாராயணம் செய்வது தீமைகளைவிலக்கும்.கருடாழ்வார் சர்ப்பங்களின் (பாம்புகளின்) பகையாகவும், அவற்றை அடக்குபவராகவும் இருப்பதால், இந்நாளில் அவரை வழிபடின் ஜாதகத்தில் உள்ள நாக தோஷம், ராகு-கேது தோஷங்கள் மற்றும் காளசர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது பலத்த நம்பிக்கை.

ஆடி வெள்ளிக்கிழமைகள் வைணவக் கோயில்களிலும் தாயார் சந்நதிகளிலும் விசேஷம். ஆடி வெள்ளிக்கிழமை காலை வேளையிலேயே தாயாருக்கு நறுமணப் பொருட்கள், பால், தேன், இளநீர் கொண்டு விசேஷ திருமஞ்சனம் (அபிஷேகம்)நடைபெறும்.

மாலை வேளையில் தாயார் பட்டு உடுத்தி, தங்கக் கவசங்கள் மற்றும் ஆபர ணங்கள் பூண்டு, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருள்வார். நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். நாற்புறமும் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட கண்ணாடி அறையில் தாயாரின் அந்தப் பேரெழில் கோலத்தைக் காண்பதே கண் கொள்ளாக் காட்சியாகும்.தாயாருக்கும் பெருமாளுக்கும் திருஷ்டி கழிக்கும் விதமாக, அன்றைய தின வழிபாடுகளின் நிறைவாக மங்களகரமான ‘திருவந்திக்காப்பு’ வைபவம் நடத்தப்படும். தில்லை திருச்சித்திரகூடம் (சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் ) போன்ற பழம்பெரும் தலங்களில்’ஆடி கடை வெள்ளி’ உற்சவம் மிக விசேஷமானது.

தாயாரையும் தோள்களில் சுமந்து வரும் ‘ஸ்ரீ பாதம் தாங்குபவர்கள்’,ஒய்யார நடை சேவை காட்டுவார்கள்.பெருமாளும் தாயாரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் அருமையாக இருக்கும்.ஸ்ரீ வில்லிபுத்தூர் மட்டுமன்றி, பெரும்பாலான பெருமாள் கோயில்களில் உள்ள ஆண்டாள் சந்நதிகளில் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரங்கமன்னார் (பெருமாள்) திருக்கல்யாண வைபவம் மிக விமரிசையாக நடத்தப்படும். திருமண வைபவத்தைக் காண்பவர்களுக்கும், இதில் வழங்கப்படும் மங்களப் பிரசாதங்களைப் பெறுபவர்களுக்கும் திருமணத் தடைகள் நீங்கி, நல்லதொரு வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.இத்தகைய சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் பெருமாளையும் தாயாரையும் ஆண்டாளையும் தரிசித்து, நாமும் வாழ்வில் அனைத்துப் பேறுகளையும் பெறுவோம்!

பராசரன்

Tags : Audi ,Month ,Thirumal Temples ,Adi ,Vainawat ,
× RELATED அம்மன் கோயில் விசேஷங்களும் ஆடி மாதச் சிறப்பும்!