×

முதல்வர் எங்கள் துயரத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்காதது மிகுந்த வருத்தம் நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்: நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சகோதரி ஆவேசம்

நாகர்கோவில்: என் தம்பிக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம், முதலமைச்சர் எங்கள் துயரத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது மிகுந்த வருத்தம் என்று நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மன் சகோதரி தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் அடித்து ெகால்லப்பட்டார். இது தொடர்பாக சிறை வார்டன், காவலர்கள் 3 பேர், சிறை கைதிகள் 8 பேர் என்று மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட சபரிவர்மன் உடலை நேற்று 4வது நாளாக அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து சபரிவர்மனின் சகோதரி கிருஷ்ணா கவுதமி நேற்று அளித்த பேட்டி: அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கைகளைக் கேட்டுக் கொண்டனர். ஆனால், என் தம்பியின் உடலை வாங்குவது குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடன்பாடு இல்லை.

அதேபோல், காவல் நிலைய, ஜெயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கேட்டபோது, நீதிமன்றம் மூலமாகத்தான் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனர். இதற்காக சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். காவல்துறை என்பது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இதுவரை முதலமைச்சர் எங்களுடைய துயரத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ஏன் இந்த மவுனம்? உண்மைகளை மறைக்கப் பார்க்கிறார்களா அல்லது இந்த வழக்கை திசைதிருப்பப் பார்க்கிறார்களா என்ற பயம் எங்களுக்கு உள்ளது. கடைசியில் இது லாக்கப்பில் சக கைதிகளால் நடந்த மோதல் என்று கூறி வழக்கை முடித்து விடுவார்களோ என்ற அச்சம் என் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் கல்விச் செலவு குறித்து சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் பணிமாற்றம் ஆகிச் சென்று விட்டால், நாளை நாங்கள் யாரிடம் சென்று கேட்பது? எனவே, காலியாக உள்ள பணியிடத்தில் நிரந்தர அரசு வேலை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை முதலமைச்சர் தரப்பில் இருந்து வழங்க வேண்டும். கோரிக்கைகள் எப்போது வேண்டுமானாலும் நிறைவேறலாம்.

ஆனால், என் தம்பியை அடக்கம் செய்வதற்கு முன்னால் அவனுக்கான நீதி கிடைக்க வேண்டும். அப்போது தான் அவனது ஆன்மா சாந்தியடையும். முதலமைச்சர் தலையிட்டு முறையான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே நாங்கள் உடலைப் பெற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

* ஓசி சிகரெட் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
சபரி வர்மன் தனது கடையில் குட்கா வைத்திருந்ததாக தென்தாமரை குளம் போலீஸ் எஸ்ஐ பிரைட் பிளசிங் தலைமையில் போலீசார் சபரிவர்மனை கைது செய்து, நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அங்கு சபரி வர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். எஸ்.பி பிரைட் பிளசிங் சபரிவர்மனிடம் ஓசியில் 10 பாக்கெட் சிகரெட் வாங்கியதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில் எஸ்ஐ பிரைட் பிளசிங்கை, தென்தாமரை குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து ஆயுதபடைக்கு மாற்றி எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* லஞ்ச வீடியோ ஆதாரத்தால் திட்டமிட்டு கொலையா? போலீஸ் மீது பகீர் புகார்
தென்தாமரைகுளம் காவல்துறையினர் தன்னிடம் லஞ்சம் வாங்கியதை சபரிவர்மன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல் போலீசாருக்குத் தெரிந்ததும், அந்த ஆதாரத்தை அழிப்பதற்காக அவரது பைக் மற்றும் செல்போனை போலீசார் முதலில் பறித்து சென்றுள்ளனர். காவல்துறையின் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்ட முயன்றதால் சபரிவர்மன் மீது போலீசாருக்கு கடும் பகையுணர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த விரோதமே காவல் நிலையத்திலேயே வைத்து அவருக்கு எதிரான கொலைத் திட்டமாக உருவெடுத்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாதாரணமான முறையில் காவல் நிலைய ஜாமீனிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஜாமீன் பெறக்கூடிய ஒரு வழக்கை, வேண்டும் என்றே ‘ரிமாண்ட்’ செய்யும் அளவுக்குக் கொண்டு சென்றது காவல்துறையின் உள்நோக்கத்தையே காட்டுகிறது.

காவல்துறையினரின் செல்போன் பறிப்பு மற்றும் வழக்கை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, சிறைக்குள் அவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த அளவுக்கு போலீசாரே சதித் திட்டம் தீட்டியுள்ளனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரது பைக் திரும்ப வழங்கப்பட்ட நிலையில் தற்போது வரை செல்போன் தென்தாமரைக்குளம் போலீசார் வசமே உள்ளது.

தென்தாமரைகுளம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும், அவர் வைத்திருந்த வீடியோ ஆதாரம் என்னவானது? அவரது செல்போன் மற்றும் வாகனம் ஏன் பறிக்கப்பட்டது? சாதாரண வழக்கை ரிமாண்ட் செய்ய வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண உயர்மட்ட நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் சபரிவர்மனின் உறவினர்களும் வலியுறுத்துகின்றனர்.

* சபரிவர்மன் இல்லத்தில் நீதிபதி நேரில் விசாரணை
நாகர்கோவில் சட்ட உதவி மைய நீதிபதி கலையரசி ரீனா, நேற்று சபரிவர்மனின் வீட்டிற்குச் சென்றார். அங்கு சபரிவர்மனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திய அவர், காவல்துறையினரின் அத்துமீறல்கள் மற்றும் சிறையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்துக் கேட்டறிந்தார். சிறைக்குள் நடந்த இந்த மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிபதியின் இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

* 8 நாட்களுக்கு பின் டூவீலர் ஒப்படைப்பு
மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் கடந்த 9ம் தேதி தென்தாமரைகுளம் போலீசாரால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் தனது டூவீலரிலேயே காவல் நிலையம் சென்றிருந்தார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர், நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறைக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தினர் பலமுறை முயற்சித்தும் வாகனத்தை ஒப்படைக்க போலீசார் மறுத்து வந்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் பிரதாப் மற்றும் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் உயிரிழந்த சபரி வர்மனின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசார் சபரி வர்மனிடம் தொடர்ந்து ‘மாமூல்’ கேட்டுத் தொந்தரவு செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து அவரது செல்போனை ஆய்வு செய்த பின்னரே அது ஒப்படைக்கப்படும் என எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த எட்டு நாட்களாகக் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்த சபரி வர்மனின் இருசக்கர வாகனத்தை, நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் ஈத்தங்காட்டிலுள்ள அவரது இல்லத்திற்கு நேரில் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

* ‘காவல் மரணம் அரசின் தோல்வி’ தவெக தேர்தல் அறிக்கை வைரல்
சிறையில் போலீசாரால் மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் தவெக தேர்தல் அறிக்கையில் ‘காவல் மரணங்கள்’ குறித்து அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. ‘வெற்றித் தமிழ்நாடு’ (இன்பம்-10) என்ற தேர்தல் அறிக்கையின் 89-வது பக்கத்தில் உள்ள ‘காவல் படுகொலை’ என்ற தலைப்பில், ‘ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசின் தோல்வியைக் காட்டுகிறது.

மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையும், சிறைத் துறையும் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்தின் தோல்வி. நமது தவெக ஆட்சியில் – திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத் தர – சுதந்திர விசாரணை மேற்கொள்ளப்படும். இத்தகைய கொடும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாகர்கோவிலில் நடந்துள்ள சிறை மரணத்தைச் சுட்டிக்காட்டி, ‘காவல் மரணம் அரசின் தோல்வி’ என தவெக கூறியுள்ள கருத்தை இணையவாசிகள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

* ரத்தத்தேக்கத்துடன் சிறுநீரகங்கள்: பிரேத பரிசோதனையில்பகீர்
சபரிவர்மன் பிரேத பரிசோதனையில், ‘அவரது கல்லீரல் இயல்பை விட அதிகமாக 2000 கிராம் எடை கொண்டு, வீக்கமடைந்திருந்தது.விதைப்பை பகுதியில் 7 x 4 செ.மீ அளவில் சிவப்பு நிறத்துடன் கூடிய சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. எனினும், உட்புறப் பரிசோதனையில் விந்தகங்களில் பாதிப்பில்லை. வலது சிறுநீரகம் 140 கிராம் மற்றும் இடது சிறுநீரகம் 160 கிராம் எடை கொண்டிருந்தன. இரண்டுமே ரத்தத் தேக்கத்துடன் காணப்பட்டன.

மண்ணீரல் 240 கிராம் எடை கொண்டிருந்தது. இதுவும் வீக்கமடைந்து ரத்தத் தேக்கத்துடன் இருந்தது. இறக்கும் தருவாயில் அவரது சிறுநீர்ப்பை முற்றிலும் காலியாக இருந்தது. இது அவர் உணவு மட்டுமின்றி தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது.அவரது தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் பகுதிகள் கடுமையாக வீங்கி ரத்தம் தேங்கிய நிலையில் காணப்பட்டன.

காவல்துறையின் வாக்குமூலத்தில் ‘சிறைக்கைதி மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே உயிரிழந்த நிலையில் இருந்தார்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்டை ஓட்டைத் திறந்து பார்த்தபோது, தலை மற்றும் கழுத்துத் தசைகளின் அடியில் ஆழமான ரத்தக் கசிவுகள் இருந்ததை மருத்துவர்கள் விரிவாகப் பதிவு செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Sabarivarman ,Nagercoil ,Minister ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2,...