×

கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். புதுபாலப்பட்டு அரசு பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு பின் சிறுவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள புதுபாலப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் சுனில்குமார், இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், இன்று மதியம் உணவருந்திவிட்டுச் சக மாணவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது, அவன் திடீரென மயங்கி கீழே விழுந்தான். உடனடியாகச் சக மாணவர்கள் இதுகுறித்து ஆசிரியர்களிடம் கூறினர்.

உடனே ஆசிரியர்கள் சுனில்குமாரை அரசம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக்கொண்டு சென்றனர். அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அறிவதற்காக உடலை பிரேத பரிசோதனைக்கு போலீஸ் அனுப்பி வைத்தது.

Tags : Kallakurichi ,Sankarapuram ,Kalalakurichi ,Pudubalat ,
× RELATED பொது சுகாதாரத்துறையின் அனுமதி பெற்ற கல்லூரிகளின் பட்டியல் வெளியீடு.