சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சாலை உள்ளிட்ட முக்கிய தேவைகளை நிறுத்தி விட்டு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18ம் தேதி ஆளுனர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட இருக்கிறது. தமிழகத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய புது திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 22ம் தேதி வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
இந்த சூழ்நிலையில் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக பட்ஜெட் எந்த தேதியில் தாக்கல் செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, தவெக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது, ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள் கொடுப்பது, திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்ேசலை, ரூ.20 லட்சம் கல்வி கடன் வழங்குவது, குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு, ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவருமா? என்ற கேள்வி ெபாதுமக்களிடம் எழுந்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு செலவுகளை குறைத்து விட்டு மகளிருக்கு ரூ.2500 வழங்குவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்துவது என்றும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
