போபால்: மத்திய பிரதேசத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பொது சிவில் சட்ட வரைவில், சேர்ந்து வாழும் ஜோடிகள் தங்களின் உறவை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு, தனது இறுதி வரைவு அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த வரைவு அறிக்கையில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் (லிவ்-இன்) ஜோடிகள் தங்களின் வசிப்பிடத்திற்கு உட்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் தங்களது உறவைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த உறவு முடிவுக்கு வந்தால், அதையும் முறையாகப் பதிவாளரிடம் தெரிவித்து ரத்து செய்ய வேண்டும். இதனைப் பதிவு செய்யத் தவறினால் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும், இந்த ஜோடிகள் வசிக்கும் பகுதியில் உள்ள போலீசார் தங்களின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் ஜோடிகளின் விவரங்களைப் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உறவைப் பற்றி ஜோடிகளின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும் என்றும், பதிவு செய்யப்படாத உறவுகள் குறித்து பக்கத்து வீட்டுக்காரர்களோ அல்லது நில உரிமையாளர்களோ புகார் அளிக்கலாம் என்றும், ஆண் தனது பெண் துணையைப் பிரிந்தால் அவருக்குப் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில பாஜக முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு, இந்த பொது சிவில் சட்ட மசோதாவை வரும் 20ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக, இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்காக வரும் 19ம் தேதி ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த புதிய சட்ட வரைவில் சொத்துரிமைச் சட்டத்திலும் முக்கிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை இறந்த நபரின் சொத்துக்கள் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய்க்கு மட்டுமே சென்று சேர்ந்த நிலையில், இனி தந்தையும் வாரிசாகக் கருதப்பட்டு சொத்தில் பங்கு பெற தகுதியுடையவர் ஆவார். இந்த சட்ட முன்மொழிவுகள் அனைத்தும் மாநிலத்தின் 21 சதவீதம் பழங்குடியின மக்கள் தொகைக்கு ஆரம்ப கட்டத்தில் பொருந்தாது என்றும் அந்த வரைவு அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
