மும்பை: பிரபல இந்தி திரைப்படமான குயின் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அவசர தடை விதிக்கக் கோரிய மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தி திரைப்படமான ‘குயின்’ படத்தின் அதிகாரப்பூர்வமற்ற இரண்டாம் பாகமாக ‘குயின் ஃபாரெவர்’ என்ற படத்தை ஜியோஸ்டார் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தங்களின் அனுமதி இன்றி தயாரிக்கப்படுவதாகவும், இதனால் தங்களுக்கு 250 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் பாண்டம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 2012ம் ஆண்டின் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தம் மற்றும் 2022ம் ஆண்டின் புதிய ஒப்பந்தத்தின்படி, குயின் படத்தின் அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் பாண்டம் ஸ்டுடியோஸ் மற்றும் ஜியோஸ்டார் (முன்னாள் வயாகாம்18) ஆகிய இரு நிறுவனங்களுக்கும் சமமாக சொந்தமானது என்றும், இதனால் தங்களின் ஒப்புதல் இன்றி அதன் இரண்டாம் பாகத்தையோ அல்லது ரீமேக்கையோ எடுக்கக்கூடாது என்றும் பாண்டம் ஸ்டுடியோஸ் வாதிட்டது. ஆனால், இந்த புதிய படம் முந்தைய படத்தின் தொடர்ச்சி அல்ல என்றும், இது முற்றிலும் புதிய தனித்துவமான படம் என்றும் ஜியோஸ்டார் நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் திட்டவட்டமாக மறுத்திருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத்தின் கதாநாயகியான பாஜக எம்பி கங்கனா ரணவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து, ஜியோஸ்டார் நிறுவனம் இப்படத்தின் விநியோக உரிமை உள்ளிட்ட மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்குவதற்கு அவசர தடை விதிக்கக் கோரி பாண்டம் ஸ்டுடியோஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கவுரி கோட்சே, இந்த விவகாரத்தில் அவசரம் எதுவும் இல்லை என்று கூறியதுடன், ஜியோஸ்டார் நிறுவனம் தனது பதிலை தாக்கல் செய்ய போதுமான அவகாசம் வழங்கிய பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று மறுத்துவிட்டார்.
ஜியோஸ்டார் தரப்பில், கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் பாண்டம் நிறுவனம் இந்த திட்டம் குறித்து அறிந்து எங்களுடன் கடிதப் போக்குவரத்து நடத்தியுள்ளது என்றும், கங்கனா ரணவத்தின் சமூக வலைதளப் பதிவு இந்த இடைக்கால மனுவில் சேர்க்கப்படவில்லை என்றும் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கங்கனா ரணவத்தின் பதிவை மனுவில் சேர்க்க பாண்டம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
