×

உறவினர் வீட்டு திருமணத்திற்கு அனுப்பி வைத்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: காட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

 

சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் மிஸ்ரா என்பவர் கடந்த 1ம் தேதி திடீரென காணாமல் போன நிலையில், இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கிஷன்கர் போலீசார் காடுகளுக்குள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது காட்டில் கட்டுமானத்தில் இருந்த ஒரு பாலத்திற்கு அடியில் இருந்து சஞ்சய் மிஸ்ராவின் சடலத்தை மீட்ட போலீசார், சற்றே தொலைவில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த அவரது பைக்கையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். தொடர் விசாரணையில், சஞ்சய் மிஸ்ராவின் மனைவி அனிதா மிஸ்ராவிற்கும், வினோத் யாதவ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதும், சம்பவம் நடந்த அடுத்த நாள் அவர்கள் செல்போனில் 200 முறைக்கு மேல் பேசியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், தங்களது கள்ளக்காதலுக்கு சஞ்சய் மிஸ்ரா இடையூறாக இருந்ததால், அவரை அனிதா தனது கள்ளக்காதலன் வினோத் யாதவ் மற்றும் அவரது நண்பரான சதீஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

உறவினர் வீட்டு திருமணத்திற்கு சஞ்சய் மிஸ்ராவை அனுப்பி வைத்த அனிதா, அவர் செல்லும் வழியில் காட்டில் வைத்து மற்ற இருவருடன் சேர்ந்து சஞ்சய் மிஸ்ராவை கொலை செய்து உடலை பாலத்திற்கு அடியில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து அனிதா மிஸ்ரா, வினோத் யாதவ் மற்றும் சதீஷ் யாதவ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பைக், செல்போன்கள் உள்ளிட்ட ஆதாரங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கமல்ஜீத் சிங் கூறுகையில், ‘அனிதாவிற்கும் வினோத்திற்கும் இடையேயான கள்ளக்காதல் உறவுக்கு சஞ்சய் மிஸ்ரா இடையூறாக இருந்ததால் இந்த கொலை நடந்துள்ளது’ என்று கூறினார்.

Tags : Chhatarpur ,Madhya Pradesh ,Sanjay Mishra ,Panna District, Madhya Pradesh ,
× RELATED உஸ்பெகிஸ்தானில் கொலையான மருத்துவ மாணவி உடல் கேரளாவில் தகனம்