சென்னை: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை தடையின்றி மற்றும் திட்டமிட்டபடி மேற்கொள்ளும் வகையில், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை குறிப்பிட்ட காலத்திற்கு இடமாற்றம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுச் சட்ட அலுவலர்கள் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் உள்துறைச் செயலாளர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான முன்னேற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படுவதுடன், பொதுமக்கள் தாங்களே இணையவழி தகவல்களை பதிவு செய்யும் Self Enumeration வசதியும் வழங்கப்படுகிறது.கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.முதல் கட்டம்: வீடுகள் மற்றும் குடியிருப்புகள் கணக்கெடுப்பு 17 ஜூலை 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையும்,இரண்டாம் கட்டம்: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1 பிப்ரவரி 2027 முதல் 31 மார்ச் 2027 வரையும் ந்டைபெறவுள்ளது,
இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக முதன்மை கணக்கெடுப்பு அதிகாரிகள், மாவட்ட கணக்கெடுப்பு அதிகாரிகள், கூடுதல் மாவட்ட கணக்கெடுப்பு அதிகாரிகள், துணை மாவட்ட கணக்கெடுப்பு அதிகாரிகள், நகர கணக்கெடுப்பு அதிகாரிகள், சார்ஜ் அதிகாரிகள் மற்றும் சிறப்பு சார்ஜ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கணக்கெடுப்புப் பணிகளுக்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளதால், இந்த அதிகாரிகள் தங்களது சட்டப்பூர்வ பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதனை ஏற்ற தமிழக அரசு, 2026 ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 30 வரை, 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள துறைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த உத்தரவு வருவாய் நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வி, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல், நில அளவை, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட கணக்கெடுப்புப் பணியில் தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
