புதுச்சேரி: தமிழகத்தில் 55 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக ஆகியுள்ளனர். அவர்களுக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், புதுச்சேரியில் விரைவில் காங்கிரஸ் மற்றும் தவெக இடையே கூட்டணி அமையும். ஆளுநருடன் மோதல் போக்கை விஜய் தலைமையிலான தமிழக அரசு கடைப்பிடிக்க விரும்பவில்லை என்றார். அப்போது பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்கள் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர்களிடம் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக அளித்தார். அதில், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், திருச்செந்தூரில் புதுச்சேரி அரசின் விருந்தினர் மாளிகை கட்ட நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், அம்மனுவை வாங்கிய அமைச்சர்கள், அதை தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் தரையில் வீசி விட்டு சென்றனர். இதைப் பார்த்த புதுச்சேரி காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் புதுச்சேரிக்காக நாங்கள் இருக்கிறோம் என வீரவசனம் பேசிவிட்டு மனுவை வீசிவிட்டு சென்றது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
