பகுதி -5
பராசர முனிவர் சொல்கிறார்.“மகாலட்சுமி ப்ருகு முனிவருக்கு மளாகப் பிறந்துஸ்ரீ மன் நாராயணனை கணவனாக அடைந்தாள்.”இப்படிச் சொன்னவுடன் மைத்ரேயர் ஒரு கேள்வி கேட்கிறார். “மகரிஷியே,ஸ்ரீ தேவி அமுதம் கடையும்போது அமிர்தக் கடலில் தோன்றினாள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்புறம் எப்படி அவர் ப்ருகு முனிவருக்கு மகளாகப் பிறந்தாள் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?”விஷ்ணு புராணத்தில் மைத்ரேய முனிவரின் இந்த நியாயமான ஐயத்திற்கு, பராசர மகரிஷி மிகவும் ஆழமான, தத்துவார்த்தமான ஒரு விளக்கத்தை அளிக்கிறார்.
பராசரரின் அந்தப் பதில், லக்ஷ்மி தேவியின் அவதார ரகசியத்தையும், அவருக்கும் நாராயணனுக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தத்தையும் விளக்குவதாக அமைகிறது.ஜெகன் மாதாவான மகாலட்சுமி என்றைக்குமே அழியாத நித்திய சொரூபி. “நித்யா ஏஷா ஜகன்மாதா விஷ்ணோ:ஸ்ரீ ரநபாயினீ” என்கிறது வேதம். மகாவிஷ்ணுவை விட்டு என்றைக்கும் பிரியாதவள்.
மகாவிஷ்ணு எப்படி சர்வ வியாபியோ அதைப்போல மகாலட்சுமியும் சர்வ வியாபி. மகாவிஷ்ணு பொருள் என்றால் மகாலட்சுமி பேச்சு. மகாவிஷ்ணு தர்மமானால் அதற்கான செயலாக மகாலட்சுமி விளங்குவாள். அவர் காமம் என்றால் மகாலட்சுமி இச்சை. அவர் யக்ஞம் என்றால் இவள் தட்சணை.
அவர் சாமவேதம் என்றால் மகாலட்சுமி உத்கீதி. அவர் அக்னி தேவன் என்றால் இவள் ஸ்வாஹா தேவி.விஷ்ணு சூரியன் என்றால் அதன் ஒளி மகாலட்சுமி. விஷ்ணு விருட்சம் என்றால் அதில் பற்றிப் படரும் கொடி மகாலட்சுமி.
நெருப்பையும் அதன் வெப்பத்தையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அதே போல் நாராயணனையும் லட்சுமியையும் பிரிக்க முடியாது. பிரபஞ்சத்தில், தேவர்கள் மனுஷர்கள் பிராணிகள் என எதிலும் மஹாவிஷ்ணுவின் புருஷ சொரூபமும் மகாலட்சுமியின் பெண் சொரூபமும் உண்டு.முன்னொரு காலத்தில், ப்ருகு முனிவர் மற்றும் அவர்தம் மனைவி கியாதி தேவியின் தவம் மற்றும் அன்பிற்கு இணங்கி, லட்சுமி தேவி அவர்களுக்கு மகளாகப் பிறந்தாள். இது அவளது ஒரு லீலை.மைத்ரேயரின் குழப்பத்தைத் தீர்க்க, பராசரர் அவதார தத்துவத்தை விளக்குகிறார்.
தேவர்கள், முனிவர்கள் அல்லது மனிதர்களின் துயரங்களைத் தீர்க்கவும், உலகை நல்வழிப்படுத்தவும் பகவான் நாராயணன் எப்பொழுதெல்லாம் அவதாரம் எடுக்கிறானோ, அப்பொழுதெல்லாம் அவனது நிழலாக, அவனது சக்தியாக மகாலட்சுமியும் அவதரிக்கிறாள்.பராசரர் மைத்ரேயரிடம், “மகாலட்சுமிக்கு அவதாரம் என்பது உடலால் ஏற்படுவது அல்ல, அது அவளது சங்கல்பத்தால் நிகழும் ஆவிர்பாவம் (வெளிப்படுதல்)” என்கிறார்.அதனால் அவளுடைய தோற்றங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன.
விஷ்ணு தேவனாக அவதரித்ததால், லட்சுமி தேவியாகிறாள்.விஷ்ணு மனிதனாக (இராமனாக) வரும்போது, லட்சுமி சீதையாக வருகிறாள்.விஷ்ணு கிருஷ்ணனாக வரும்போது, அவள் ருக்மிணியாக வருகிறாள்.விஷ்ணுவின் உருவத்திற்கு ஏற்ப, லட்சுமி தன் வடிவத்தை அமைத்துக் கொள்கிறாள். அர்ச்சாவதாரத்திலும் கூட மகாலட்சுமி வெவ்வேறு தலங்களில் வெவ்வேறு முனிவர்களுக்கு புதல்வியாகப் பிறந்து அந்தந்த தலத்து எம் பெருமானை மணந்து கொள்வதாக தல வரலாறு வருகிறது. எனவே, அவள் பாற்கடலில் தோன்றியது எப்படி உண்மையோ, அதைப் போல மகரிஷிகளுக்கும் புதல்வியாக பிறந்ததும் உண்மைதான்.
அவை வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்றன என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். எனவே, பாற்கடலில் இருந்து அவள் தோன்றியது ஒரு புதிய பிறப்பு அல்ல; மாறாக மறைந்திருந்த தேவி மீண்டும் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட (மறுஅவதாரம்) நிகழ்வே ஆகும்.இப்படிச் சொல்லிய பராசரர் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றிய வைபவத்தை அற்புதமாகச் சொல்லத் தொடங்குகிறார்.இது வெறும் கதை அல்ல.
இதன் பின்னணியில் இருக்கக்கூடிய பல விஷயங்கள் நமக்கு வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விஷயங்களை மறைமுகமாக எடுத்துரைக்கின்றன. அகங்காரம் வந்துவிட்டால் எப்படிச் செல்வம் அழியும்? அப்படி அழிந்த செல்வத்தை மறுபடியும் எப்படிப் பெறுவது என்பதன் குறியீடாகத்தான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றிய கதை சொல்லப்பட்டு இருக்கிறது.
இதில் பல தத்துவங்களும் இருக்கின்றன.முதலில் ஐஸ்வரியமாகிய செல்வம் என்பது மகாலட்சுமிக்கான குறியீடு.அகம்பாவத்தினாலும் தலைகனத்தினாலும் அது அழியும் என்பது மகாலட்சுமி தேவர்களை விட்டு நீங்கி விட்டாள் என்பதன் குறியீடு. அதை மறுபடியும் பல்வேறு வகைகளில் உழைத்துப் பெற முயல்வது என்பது பாற்கடலைக் கடைந்ததன் குறியீடு. அப்படி முயற்சி செய்கின்ற பொழுது இழந்த ஐஸ்வர்யத்தோடு புதிய ஐஸ்வர்யங்களும் அதாவது புதிய செல்வங்களும் கிடைக்கும் என்பது பாற்கடலில் தோன்றிய பல்வேறு விதமான பொருள்களுக்கான குறியீடு. இப்படித்தான் பாற்கடல் கடைந்த கதையை நாம் நம்முடைய வாழ்வியல் அறத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் இந்த பாற்கடல் கடையப்பட்ட கதையைப் பார்ப்போம். துர்வாச முனிவர் அத்திரி அனசூயை தம்பதிகளுக்குப் பிறந்தவர். அவர் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருப்பார். ஒருமுறை அவர் ஒரு அற்புதமான நறுமணத்தை உணர்ந்தார். அது எங்கே இருந்து வருகிறது என்று பார்த்த பொழுது சில வித்யாதர பெண்கள் மஹாலட்சுமியை தரிசித்துவிட்டு கையில் மஹாலஷ்மியின் பிரசாதமான மாலையோடு வந்து கொண்டிருந்தார்கள். அந்த மாலையில் இருந்து அற்புதமான நறுமணம் வந்ததைத் தெரிந்து கொண்டார் துர்வாசர்.
வித்யாதரப் பெண்களிடம் முனிவர் அந்த மாலையைக் கேட்க அவர்களும் தந்தார்கள். அதை தன்னுடைய தலையில் வைத்துக் கொண்டு அவர் பித்தனைப் போல மகழ்ச்சியோடு சுற்றி வந்தார்.
எல்லா உலகங்களிலும் சஞ்சரிக்கக் கூடிய ஆற்றல் படைத்த துர்வாச முனிவர் சொர்க்க லோகம் சென்றார். அன்றைய தினம் இந்திரனுக்குப் பிறந்தநாள். அவன் ஐராவதம் என்ற யானையின் மீது மகிழ்ச்சியோடு அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருந்தான்.இந்த நேரத்தில் இந்திரனுக்கு மஹாலட்சுமியின் பிரசாதமான அபூர்வமான மாலையைப் பரிசாகத் தரலாம் என்று நினைத்த துர்வாசர், மாலையை இந்திரனுக்குத் தர, இந்திரன் அலட்சியமாக யானையின் அங்குசத்தால் எடுத்து யானையின் தலையில் வைத்தான்.
ஏதோ ஒன்று உறுத்துகிறதே என்று ஐராவதம், அந்த மலர் மாலையை துதிக்கையால் தாறுமாறாக இழுத்து காலில் போட்டுத் தேய்க்க, மகாலட்சுமியின் பிரசாதம், தன் கண் முன்னால் அவமதிக்கப்படுவதைக் கண்ட துர்வாச முனிவர் மிகவும் கோபம் கொண்டார்.அடுத்த நொடி உலகம் நடுநடுங்க பெருங்குரலில் சாபமிட்டார்.“இந்திரா, புனிதமான மகாலட்சுமியின் மாலையை உன்னுடைய அகங்காரத்தினால் நீ அவமதித்து விட்டாய். உலகத்தில் உள்ள அத்தனை செல் வங்களும் உன்னிடத்தில் உள்ளது என்ற அகங்காரம் அல்லவா உன்னை இப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய வைத்தது. எனவே, எந்தச் செல்வம் இருக்கிறது என்ற கர்வத்தால் நீ இந்த அவமரியாதையைச் செய்தாயோ, அந்தச் செல்வம் உன்னை விட்டு அகலட்டும்” தேவேந்திரன் முகம் சுருங்கியது.
கீழே இறங்கி மன்னிப்பு கேட்டான்.அப்பொழுது துர்வாச முனிவர், “நீ அகங்காரம் கொள்வதும், தண்டனை கிடைத்ததும் மன்னிப்பு கேட்பதும் சரியான செயல் அல்ல. வசிஷ்டர் கௌதமர் போன்றவர்கள் தயாளகுணத்தோடு உன்னை மன்னிக்கலாம். அப்படி அவர்கள் நீ செய்கின்ற தவறை மன்னிப்பதால் உன்னுடைய அகங்காரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, நீ செய்த செயலுக்கான விளைவை அனுபவித்துத்தான் தீர வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எல்லா உலகங்களும் சோபை இழந்து விட்டன.
இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவம் அற்புதமானது.தேவர்களின் தலைவனான இந்திரனிடம் அறிவு, ஆற்றல், வீரம், பதவி என அனைத்துச் செல்வங்களும் உச்சத்தில் இருந்தன. ஆனால், அளவுக்கு அதிகமான செல்வம் வரும்போது, மனிதர்களுக்குத் தங்களை அறியாமலேயே ‘மதம்’ (கர்வம்) தலைக்கேறிவிடுகிறது.
துர்வாச முனிவர் கொடுத்த தெய்வீக மாலையை இந்திரன் மதிக்காமல், தன் கர்வத்தினால் அதை ஐராவத யானையின் தலை மேல் வைத்தான். அந்த யானை அதைத் தூக்கி எறிந்து மிதித்தது.
இங்கே யானை என்பது மனிதனின் கட்டுப்பாடற்ற, அடக்கமற்ற மனதிற்கு குறியீடு. செல்வம், ஒருவனுடைய நன்றியுணர்வையும், பெரியோர்களை மதிக்கும் விவேகத்தையும் எப்படி மழுங்கடிக்கிறது என்பதற்கு இந்திரனின் இந்தச் செயலே சான்று.முனிவரின் சாபத்தால் இந்திரனை விட்டு ‘ஸ்ரீ’ (லட்சுமி/செல்வம்) நீங்கியது.
செல்வம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல; அது ஒரு மனிதனின் மன வலிமை, வீரம், தேஜஸ் (பொலிவு), மற்றும் நற்பெயர் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.லட்சுமி கடாட்சம் விலகிய அடுத்த கணமே, இந்திரனும் தேவர்களும் தங்கள் ஒளியையும், ஆற்றலையும் இழந்தார்கள். அசுரர்கள் (பகைவர்கள்) எளிதாக அவர்கள் மேல் போர் தொடுத்து, தேவேந்திரனை அவனது சிம்மாசனத்தில் இருந்தே விரட்டியடித்தார்கள்.இந்திரன், அத்தனையும் இழந்து, பகைவருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தபோதுதான் தன் தவறை உணர்கிறான்.
பிரம்மாவின் வழிகாட்டுதலின்படி, மீண்டும் பாற்கடலைக் கடைந்து, அமுதம் தோன்றும் வேளையில் லட்சுமி தேவி மறுபடி வெளிப்படும்போது, இந்திரன் அவளை மிக உருக்கமாகத் துதிக்கிறான். இதுவே விஷ்ணு புராணத்தில் உள்ள ‘இந்திரகிருத லட்சுமி ஸ்தோத்திரம்.அப்போது அவன் கேட்கும் வரம் மிக முக்கியமானது: “தாயே! நீ இனி ஒருபோதும் இந்த உலகையும், என்னை வணங்குபவர்களையும் விட்டு நீங்கக் கூடாது” என்று வேண்டுகிறான். அதாவது, “இனி நான் கர்வப்பட மாட்டேன், கர்வத்தால் உன்னை (செல்வத்தை) அலட்சியப்படுத்த மாட்டேன்” என்ற பக்குவம் அவனுக்கு அந்த வீழ்ச்சிக்குக் பின்பே கிடைக்கிறது.
“செல்வத்தான் ஆம் இன்பம் அத்தனையுமே, செல்வம்போம் வழித் துன்பமாய் மாறும்” என்ற உலக நீதிக்கு இந்திரனின் கதையே சிறந்த உதாரணம்.அடக்கம் இல்லாத செல்வம் நிலைக்காது என்பதும், நம்மிடம் இருக்கும் அறிவு, ஆற்றல், வீரம் போன்ற செல்வங்கள் பிறரை மதிப்பதற்கும், நல்வழியில் நடப்பதற்கும் மட்டுமே பயன்பட வேண்டும்; இல்லையெனில், இந்திரனைப் போல நாமே நம் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடுவோம் என்ற மிக உன்னதமான வாழ்வியல் தத்துவத்தை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவற்றுள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.”(குறள்: 125)
என்ற திருக்குறள், இந்த முழு புராணக் கதையின் சாரத்தையும், மனித வாழ்க்கையின் மிக உன்னதமான அறத்தையும் இரண்டு வரிகளில் அப்படியே பிழிந்து தந்துவிடுகிறது.
ஒன்றும் இல்லாதவன் பணிவாக இருப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால், அதிகாரம், அறிவு, ஆற்றல், செல்வம் என எல்லாம் இருக்கும் போது ஒருவன் தலைக்கனம் இல்லாமல், பணிவோடு இருக்கிறானே… அதுதான் உண்மையான தவம்.இந்திரனிடம் 16 வகைச் செல்வங்களும் இருந்தன; ஆனால் இந்த ‘பணிவு’ என்ற மாபெரும் செல்வம் மட்டும் அவனிடம் தற்காலிகமாக இல்லாமல் போனது. விளைவு, அவனிடம் இருந்த மற்ற எல்லாச் செல்வங்களும் அவனை விட்டு ஓடிப்போயின.
செல்வம் என்பது ஓடும் நதி போன்றது. அது நம்மிடம் இருக்கும்போது, “இது என் திறமையால் வந்தது” என்ற கர்வம் வராமல், “இது எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு” என்ற எண்ணத்தோடு, இன்னும் அதிக பணிவோடு வாழ வேண்டும் என்ற உன்னதமான வாழ்வியல் உண்மையை இந்தக் கதை நமக்கு ஆழமாக உணர்த்துகிறது.
