கிழக்கிலிருந்து தொடங்குங்கள்

கிழக்கிலிருந்து தொடங்குங்கள்

முதல் திசையாக கிழக்கு இருக்கிறது. எந்த விஷயத்தையும் நாம் கிழக்கில் இருந்துதான் ஆரம்பிக்கிறோம். ஒரு விளக்கை ஏற்றி வைக்கிறோம் என்று சொன்னால், கிழக்காக விளக்கேற்றி வைக்கின்றோம். பெரும்பாலான கோயில்கள் பிரதான வாயில் கிழக்கு வாயிலாக இருக்கும். பெரும்பாலான தெய்வங்கள் கிழக்கு நோக்கி அருள் புரிவார்கள். கிழக்கு என்பது இந்திரனுடைய திசை. இவர் சந்தான விருத்திக்கும் சகல ஐஸ்வரியங்களுக்கும் காரணமாக இருக்கின்றார்.

அஷ்டதிக் பாலகர்களுக்கும் இவர்தான் தலைவராக இருக்கின்றார். இவர் வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும் மீது ரத்ன மாணிக்கங்களை அணிந்து காட்சி தருகின்றார். இவருடைய தேவிக்கு இந்திராணி என்று பெயர். இவருடைய அருள் பூரணமாக பெற வேண்டுமானால் இந்தக் கிழக்கு திசையானது நன்கு விசாலம் உடையதாகவும், சுத்தமாகவும், எந்த தடைகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஒரு வீட்டில் நீங்கள் காலி இடம் விட வேண்டும் என்று சொன்னால், கிழக்கு திசையில்தான் அதிகமான இடத்தைவிட வேண்டும். அரசாங்க அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் இல்லங்கள் கிழக்குப் பக்கம் தலைவாசல் உள்ளதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

தென் கிழக்கில் அக்னியை வளருங்கள்

தென் கிழக்கு என்பது அக்னி மூலை (ஆக்னேயம்) என்று சொல்வார்கள். மிகவும் தூய்மையானது. எல்லா பாவங்களையும் அழிக்கவல்லது. அதனால்தான் யாகங்கள் ஹோமங்கள் வளர்க்கும்போது அக்னியிடம் எல்லாவற்றையும் கொடுத்து அனுப்புகிறோம். அவருக்கு இரண்டு தேவிகள் உண்டு. ஒரு தேவிக்கு ஸ்வாஹா என்று பெயர், ஒரு தேவிக்கு ஸ்வதா என்று பெயர். தென்கிழக்கு திசையில் பெரும்பாலும் சமையலறையை வைப்பது நல்லது. மின்சார சாதனங்களை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், படுக்கையறை கட்டாயமாக அக்னி மூலையில் இருக்கக் கூடாது. அதேபோல மழைநீர், கழிவுநீர் இவைகளெல்லாம் அந்த திசையில் தேங்கக் கூடாது. தென்கிழக்கில் ஏதேனும் பள்ளம், குளம், கழிவு நீர் வாய்க்கால் போன்றவை இருந்தால், பலவிதமான சுபகாரியத் தடைகள் ஏற்படும். கோர்ட் வம்பு வழக்குகள் ஏற்படும் என்பது வாஸ்து சாஸ்திரம்.

தர்மராஜாவின் தெற்குதிசை

தெற்கு என்பது கால தேவனுடைய திசை. அவருக்கு தர்மராஜா என்று பெயர். இந்த திசை துல்லியமாக அமைய வேண்டும். இத்திசையில் கழிவறை கூடாது. தண்ணீர் தொட்டி போன்ற பூமிக்கடியில் இருக்கக்கூடிய விஷயங்கள் இருக்கக் கூடாது. அதைப் போலவே தெற்கு திசையில் காலியிடங்கள் அதிகம் இருக்கக் கூடாது. இருந்தால் அது வீட்டு முதலாளிக்கு அல்லது வீட்டுத் தலைவனுக்கு ஆகாது. நோய் நொடிகளையும் துன்பங்களையும் தரும். அந்த திசையை மிகச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

தென்மேற்கில் கணபதியை பிரதிஷ்டை செய்யுங்கள்

தென் மேற்கு திசைக்கு நைருதி திசை என்று பெயர். கன்னி மூலை என்று சொல்வார்கள். பெரும்பாலான கோயிலில் கணபதியை இந்த திசையில்தான் வைத்திருப்பார்கள். இந்த திசையில், எந்தத் தடைகளும் இருக்கக் கூடாது. மற்ற திசைகளுக்கு எல்லாம் தேவர்கள் இருப்பார்கள். இந்த திசைக்கு ராட்சசர்கள் இருப்பார்கள். அவருடைய தேவிக்கு காரிகை என்று பெயர். இந்த திசை எக்காரணத்தை முன்னிட்டும் அதிகமாக வளரக்கூடாது. இயன்றளவு இந்த திசையில் அதிக கனமுள்ள பொருள்களைப் போட வேண்டும். திறப்பு இல்லாமல் அடைக்க வேண்டும். பெரிய மரங்களை வளர்க்கலாம். பெரிய கட்டடங்களைக் கட்டலாம். அப்படி அந்த திசையை பாதுகாப்பாக வைத்திருந்தால், நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

 

Related Stories: