வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்

 

திருவொற்றியூர், ஜூலை 8: வீடு கட்டுவதற்கு ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவொற்றியூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரேகா, கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை புதிதாக கட்டி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவர் ரேகாவிடம், ‘நான் தவெக வட்ட செயலாளர். இது எங்களுடைய ஆட்சி. அதனால் நீங்கள் வீடு கட்டினால் எங்களுக்கு ரூ.50 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ரேகா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ரேகா காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூலி வேலை செய்து வரும் நான், அதில் வரக்கூடிய வருமானத்தை சிறுக, சிறுக சேர்த்து பல ஆண்டுகளாக குடியிருக்கும் எனது வீட்டை புதியதாக கட்டி வருகிறேன். வீடு கட்டும் பணி நடப்பதால் என்னுடைய குழந்தைகள் வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கின்றனர். ஆளுக்கு ஒரு பக்கமாக இருப்பதால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க வட்டிக்கு பணம் வாங்கி வீட்டை கட்டி வருகிறேன். இந்நிலையில், ராகுல் என்பவர் தான், தவெக வட்டச் செயலாளர் என்றும், இந்த பகுதியில் வீடு கட்டினால் எங்களுக்கு ரூ.50 ஆயிரம் மாமுல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார்.

அதற்கு, நானே கூலி தொழிலாளி, மிகவும் சிரமப்பட்டு இந்த வீட்டை கட்டி வருகிறேன். என்னிடம் ரூ.50 ஆயிரம் கேட்டால் எப்படி தர முடியும் என்றேன். ஆனால் அதை ஏற்காத ராகுல் பணம் கொடுத்தால் தான் வீடு கட்ட முடியும், என்று தொடர்ந்து 3 நாட்களாக கட்டிட வேலை செய்ய விடாமல் தடுத்து வருகிறார். இதனால் கட்டுமானப் பணியை செய்ய முடியவில்லை. இப்படி பணம் கேட்டு மிரட்டுவதற்காகவா நாங்கள் இவர்களுக்கு வாக்களித்தோம். கொள்ளையடிக்க வேண்டும் என்றால் எவ்வளவு இடங்கள் இருக்கிறது.

எங்களைப் போன்ற ஏழைகளிடம் தவெக வட்ட செயலாளர் என கூறி மிரட்டுகிறார்களே இது நியாயமா? எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே திருவொற்றியூர் பகுதிகளில் சிலர், தவெக நிர்வாகிகள் என கூறி பல்வேறு வகைகளில் பலரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக காவல் நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பொதுமக்களை மிரட்டி மாமுல் கேட்பவர்கள் யார் என காவல் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: