×

ஹாலண்ட் மிரட்டலில் வெளியேறியது பிரேசில்

நியூயார்க்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் 5 முறை சாம்பியன் பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நார்வே காலிறுதிக்கு முன்னேறியது. நியூ ஜெர்சி அரங்கில் நடந்த இப்போட்டியில், இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் இடைவேளை வரை கோல் ஏதும் அடிக்காமல் சமநிலை வகித்தன. இரண்டாவது பாதியிலும் இதே நிலை தொடர்ந்தது. பந்தை கடத்திச் செல்வது, கட்டுப்பாட்டில் வைப்பது, இலக்கு நோக்கி தாக்குதல் நடத்துவது என அனைத்து வகையிலும் நார்வே அணி பிரேசிலை விட சற்று துடிப்பாகவே செயல்பட்டாலும் கோல் மட்டும் அடிக்க முடியவில்லை.

பிரேசில் அணி தரப்பில் ஒரு பெனால்டி உள்பட பல கோல் வாய்ப்புகளை நழுவிட்டனர். குறிப்பாக, நார்வே கோல் கீப்பர் ஓர்ஜன் நைலேண்ட் ஒரு பெருஞ்சுவராக நின்று பிரேசில் வீரர்களின் அனைத்து ஷாட்களையும் தடுத்து அசத்தினார். ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நார்வே நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் 79வது நிமிடத்தில் உயரே எகிறிப் பாய்ந்து தலையால் முட்டிய பந்து பிரேசில் கீப்பர் அலிஸ்ஸானை ஏமாற்றி வலைக்குள் தஞ்சம் புகுந்தது. அதே உற்சாகத்துடன் தாக்குதலை தீவிரப்படுத்திய நார்வே அணிக்கு, ஹாலண்ட் மீண்டும் ஒரு அற்புதமான கோல் அடிக்க (90வது நிமிடம்_ 2-0 என முன்னிலை அதிகரித்தது.

பதில் கோல் அடிக்க பிரேசில் அணியும் முட்டி மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இன்ஜுரி டைமில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (90’+10’) ஒரு கோல் போட்டார். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வர, நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதியில் கால் வைத்தது. 5 முறை சாம்பியனான பிரேசில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரவுண்ட் ஆப் 16 உடன் மூட்டைகட்டியது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. முன்னதாக, 1990ல் அந்த அணி ரவுண்ட் ஆப் 16ல் அர்ஜென்டினாவிடம் தோற்று வெளியேறி இருந்தது.

* நார்வே உலக கோப்பை காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

* நார்வே அணி 55 சதவீத நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், பிரேசில் 35% நேரம் மட்டுமே கால் வித்தை காட்டியது.

* பிரேசில் தரப்பில் 14 ஷாட்களும், நார்வே தரப்பில் 9 ஷாட்களும் அடிக்கப்பட்டன. அதில் பிரேசில் 4 முறை, நார்வே 5 முறை இலக்கு நோக்கிய துல்லிய தாக்குதலாக அமைந்தன. ஜூலை 12ம் தேதி மயாமி அரங்கில் நடக்க உள்ள காலிறுதியில் (அதிகாலை 2.30) நார்வே இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

* சான்ஸ் கிடைத்தால் கோல் தான்!
முன்னாள் சாம்பியன் பிரேசில் அணிக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற நார்வே நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் (25 வயது) கூறுகையில், ‘அது என்னவோ தெரியவில்லை என்ன மாயமோ தெரியவில்லை! எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அது கோலாக மாறிவிடுகிறது. அது எப்படி நிகழ்கிறது என்பது எனக்கே தெரியாது.

ஆனால், அப்படித்தான் நடக்கிறது! மொத்தத்தில் ஒருமித்த கவனத்துடன் இருக்க வேண்டும். வாய்ப்பை தவறவிட்டாலும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோல் அடிப்பது கடவுள் எனக்களித்த பரிசு என்பதை இப்போது உணரத் தொடங்கியிருக்கிறேன். நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது’ என்றார்.

Tags : Brazil ,Holland ,New York ,Norway ,FIFA World Cup ,New Jersey Stadium ,
× RELATED உலகக் கோப்பை கனவு முடிவு: கண்ணீருடன் வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!