சென்னை: மதுரவாயல் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை எச்சை இலை எடுக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ரேவந்த் சரன் வெற்றி பெற்றார். கடந்த 2 மாதங்களாக மதுரவாயல் எம் எல்.ஏ அலுவலகம் திறக்காமல் இருந்தது. இதனால் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை எங்கு கொடுப்பது என தெரியாமல் தவித்து வந்தனர்.இந்த நிலையில் இன்று மதுரவாயல் எம்.எல்.ஏ அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை தவெக அமைச்சர் புஸ்லி ஆனந்த் திறந்து வைத்தார். விழாவில் எம்.எல் ஏக்கள் வி.எஸ் பாபு,ரேவந்த் சரன் மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தவெக நிர்வாகிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதனை அருகே இருந்த சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது உணவு சப்பிட்ட பின் எச்சை இலை எடுப்பதற்கும் அங்கு குப்பைகளை அகற்றுவதற்கும் சென்னை மாநகராட்சி 11 மண்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பயன்படுத்தியுள்ளனர்.அவர்களது வார்டில் பணி இருந்தும் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் தூய்மை பணியாளர்களை எச்சை இலை எடுக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
