×

இயற்கை 360°

நன்றி குங்குமம் தோழி

சோம்பு எனும் சிறு துரும்பு

நமக்கெல்லாம் சோம்பு தெரியும். விருந்து உட்கொண்ட பிறகு சிறிது சோம்பை மெல்வது காலங்காலமாய் நம்மிடையே இருந்துவரும் பழக்கம்தான் என்றாலும், சோம்பு என்பது ஒரு மகரந்தம் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

உலகின் மிக உயரிய நறுமணப் பொருட்களில், சோம்பு மகரந்தமும் ஒன்று. ‘தேவதைகளின் நறுமணப் பொருள்’ (Spice of Angels) என அழைக்கப்படுகிற, சோம்பு என்கிற பெருஞ்சீரகம் குறித்து தெரிந்து கொள்ள, ஒரு 360° பயணத்தை மேற்கொள்வோம் வாருங்கள்..!“சோம்பின் இனிய நறுமணம், மற்ற உணர்வுகளைக் காட்டிலும் பசியுணர்வையே தூண்டும்” என ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டனும், ‘‘இயற்கையை ரசிக்க உதவும் கண்களுக்கான மருந்தென..” கிரேக்க மருத்துவர் பிளைனியும், ‘‘சிறு நறுமணப்புல்” என தன் வாழ்க்கை கோப்பை கவிதையில் லாங்ஃபெல்லோவும் புகழ்பாடிய Fennel என்கிற சோம்பின் தாவரப்பெயர், Foeniculum vulgare. இது தோன்றிய இடம் தெற்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில்.

‘Fennel’ என்ற சொல், ‘Ferula’ என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்திருக்கிறது. Ferula என்றால் வறண்ட புல் எனப் பொருள். இதன் வெண்பச்சை நிற விதைகளையே அன்றாடம் உணவு சேர்க்கையாக நாம் பயன்படுத்துகிறோம். பண்டைய காலங்களில், ஐரோப்பியர்களின், குறிப்பாக இத்தாலியர்களின் ராஜ உபசாரங்களில் உணவுச் சேர்க்கையாய் விளங்கியது சோம்பு. ஒருகட்டத்தில் உலகெங்கிலும் உணவு நறுமணச் சேர்க்கையாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. எளிதில் செரிமானம் ஆகாத உணவினை செரிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவை சோம்பு விதைகள். விருந்துகளிலும் உணவு விடுதிகளிலும், இறுதியாக சோம்பை வறுத்தோ, இனிப்பு சேர்த்தோ வைப்பதின் காரணமும் இதுவே!

இன்னும் குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளின் திடீர் அழுகைக்கு சிறந்ததொரு வளிம நீக்கியாகவும், சோம்பு விதைகளில் ஊற வைத்த நீர் இருப்பதால், வீட்டு வைத்தியத்திற்கான சீரகம் போன்றே சோம்பு எனும் பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.தமிழகத்தில் இதனை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்றும், பிற மாநிலங்களில் சான்ஃப்(Saunf), சதபுஷ்பா, மதுரிகா, சோம்ப், மிஷ்ரேயா, மதுரா என்றும், ஃபின்னாச்சியோ, பிஸ்பாஸ், ஃபென்னேரூ, அனீஸ், அனிஸீட், ஸ்வீட் க்யூமின் என மத்திய தரைக்கடல் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அழைக்கப்படுகிற சோம்பு, கேரட் வகையைச் சார்ந்த தாவரம்.

சோம்பின் விதைகள் மட்டுமின்றி, அதன் வேர், பூண்டு, தண்டு, இலை, பூ மற்றும் மகரந்தம் என அனைத்தும் நமக்கு பயனளிப்பவையே. சோம்பில் பிரம்மிக்கத்தக்க மருத்துவ குணங்கள் பலவும் நிறைந்துள்ளன. 100 கிராம் சோம்பு விதைகளில் 15 கிராம் நார்ச்சத்து, 36 கிராம் மாவுச்சத்து, 15 கிராம் புரதச்சத்து மற்றும் 14 கிராம் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

இதில், ட்ரான்ஸ் அனீத்தோல், ஈஸ்ட்ரகோல், ஃபென்ச்சோன், லிமோனீன் போன்ற எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள், இதனது பிரத்யேக வாசனைக்கு மட்டுமின்றி, பல்வேறு மருத்துவ குணங்களுக்கும் காரணமாய் இருக்கின்றன. இதிலுள்ள வைட்டமின் A, C, B, K மற்றும் பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீஸ், செலீனியம், ஃபாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமங்களும், டானின்கள், லூட்டீன், ஜியா-ஸாந்தின், நைட்ரேட்கள் மற்றும் தாவர ஈஸ்ட்ரோஜன்கள் தனித்துவச் சுவை மற்றும் குணங்களை வழங்குகின்றன.

உடலின் வளர்சிதை மாற் றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவும் சோம்பு, சிறுநீர் பெருக்கியாய் இருப்பதால் சோம்பு நீரானது சிறுநீர் உபாதையில் இருந்து விடுபடவும் உதவுகிறது. மேலும், உடற்பருமன், ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம், இதய அடைப்பு நோய், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய், எலும்புப்புரை ஆகியவற்றின் பாதிப்புகளை குறைக்க உதவுவதுடன், நுரையீரல், கல்லீரல், கணையம், சருமம் மற்றும் கண் ஆரோக்கியத்தைக் கூட்டி, கௌட், ஆஸ்துமா, மன அழுத்தம், தூக்கமின்மை பிரச்னை போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

திடீரென ஏற்படும் விக்கலை நிறுத்த உதவுவதுடன், வயிற்று அழற்சியை குறைத்து, பெருங்குடல் அழற்சி நோய்கள், மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது. ஈஸ்ட்ரோஜன் ஆற்றல்கொண்ட சோம்பு விதைகள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், பி.எம்.எஸ் (PMS) மற்றும் மெனோபாஸ் பிரச்னைகளுக்கும் தீர்வாய் இருக்கிறது.இதிலுள்ள அனீத்தோல்(Anethole) எனும் எளிதில் ஆவியாகும் எண்ணெய், பெண்களின் மார்பக வளர்ச்சியை அதிகரிப்பதுடன், பால் சுரப்பதையும் கூட்டுகிறது. அத்துடன், இருபாலரிடையே பாலுணர்வைத் தூண்டி, கருவுறுதல் விகிதத்தைக் கூட்டுகிறது. இப்படியாக, கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட உடல் உபாதைகளுக்கு துணை நிற்கிறது சோம்பு என்கிற ஆயுர்வேத மருத்துவம்.

‘Oil of Fennel’ எனப்படும் சோம்பு விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய், பைனீன், சினியோல், ஃபென்ச்சோன், மிதைல் சாவிக்கால், மிர்சீன் போன்ற தாவர எண்ணெய்கள் நிறைந்தவை. இவை சோம்பலை நீக்கி, மன அழுத்தத்தைக் குறைத்து, உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிப்பதுடன், வியர்வை மற்றும் சிறுநீர் பெருக்கியாகவும் பயனளிக்கிறது.ரத்த அழுத்தத்திற்கான Beta blockers (Aten) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போதும், ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ளும் போதும் சோம்பினை உணவாய் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. கொத்தமல்லி, சீரகம் ஆகிய உணவுகளால் ஒவ்வாமை ஏற்படும் நபர்களுக்கு சோம்பும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அன்றாட சமையலுக்கு சுவையைக் கூட்ட பெரிதும் பயன்படுகிற சோம்பு விதைகளை, தேநீராகவும், சோம்பு நீராகவும் கூடப் பருகலாம். மாமிச உணவுகளின் வாடையைக் குறைக்க உதவுவதால், அசைவ உணவு தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. இதன் விதைகள் மட்டுமன்றி, இளம் தண்டு, பூக்கள், வேர்ப்பூண்டுகள், பூக்களின் மகரந்தங்கள் என அனைத்துமே கறி, சூப், சாலட், கஞ்சி, தேநீர் போன்றவை தயாரிக்க உதவுகின்றன. சோம்பின் சுவை தருகிற மணத்தையும், புத்துணர்வையும், ‘Pure Summer Joy’ எனச் சிலாகிக்கும் சமையல் வல்லுநர்கள், ரகசிய உணவுச் சேர்க்கையாகவும் பயன்படுத்துகின்றனர்.

தற்போது பிரபலமாகி வரும் சோம்பின் மகரந்தம், சோம்பின் விதைகளைக் காட்டிலும், உணவிற்கு நறுமணத்தையும், தனிச்சுவையும் தருவதால், இத்தாலிய மற்றும் அமெரிக்க ராஜ உபச்சார உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கை வளங்களில் சோம்பும் ஒன்று என்பதால், பப்பைரஸ் (Papyrus) எனும் எகிப்திய மருத்துவ குறிப்பேட்டில், செரிமானத்திற்கான உணவாய் சோம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்கர்களும், ஆங்கிலேயர்களும், விரத நாட்களில், சோம்பை மென்றபடி பசியை போக்கினர் என்றும், இந்தியர்களும், சீனர்களும் மூலிகை மருந்தாகவும், உணவாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர் எனவும் வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகிறது.

பண்டைய காலத்தில், சூனியங்களை தடுக்கும் ஆற்றல் பெற்றவை சோம்பு என்றும், துணிவு, வீரம், வலிமை ஆகியவற்றின் அடையாளம் எனவும் மில்டன், ஷேக்ஸ்பியர் போன்ற கவிஞர்களாலும், ஹிப்போக்ராட்டிஸ், பிளைனி உள்ளிட்ட மருத்துவர்களாலும் கொண்டாடப்பட்டிருக்கிறது.மித வெப்ப நிலையில் வருடம் முழுதும் வளரும் புல் வகையைச் சார்ந்த தாவரமான சோம்பு இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மேகாலயா மற்றும் கேரள மாநிலங்களில் அதிகம் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. உலக அளவில் இந்தியா 60% சோம்பினை விளைவிக்கிறது. சீனா, எகிப்து, துருக்கி போன்ற நாடுகளிலும் இது அதிகமாக விளைகிறது.

இதன் மஞ்சள் நிறப் பூக்களிலிருந்து கைகளால் சோம்பை பிரித்தெடுப்பது, குங்குமப்பூ பிரித்தெடுத்தலுக்கு நிகரான கடினமான பணி என்பதால், உலகின் விலையுயர்ந்த உணவுப் பொருள் வரிசையில் இரண்டாம் நிலை வகிக்கிறது.சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும், அமைதியையும் தரும் ‘சோம்பு எனும் சிறுதுரும்புடன்’ இனிதாகட்டும் நம் நாட்கள்..!

(இயற்கைப் பயணம் நீளும்.)

தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்

 

Tags :
× RELATED சிவப்பு திராட்சை நன்மைகள்!