×

பெண்களுக்கு எதிரான வன்முறையை மறைமுகமாக அங்கீகரித்தவர் மம்தா; பாஜக எம்.பி குற்றச்சாட்டு

கொல்கத்தா: சுமார் 15 ஆண்டுகளாக ஒரு பெண் முதலமைச்சராக இந்த மாநிலத்தில் இருந்த போதிலும், இந்தியாவில் பாலியல் வன்புணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக மேற்கு வங்கம் இருந்ததாக அம்மாநில பாஜக எம்பி-யான ராகுல் சின்ஹா ​​குற்றம்சாட்டி உள்ளார்.

ஒரு காலத்தில் குறிப்பாக சொல்ல போனால் தான் ஆட்சியில் இல்லாத போது இத்தகைய கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய அதே பெண் முதலமைச்சர், அவர் ஆட்சி செய்த போது இத்தகைய சம்பவங்கள் நிகழும் போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதற்கு பதிலாக குற்றவாளிகளுக்கே ஆதரவாக நின்றதை கண்கூடாக பார்த்தோம் என்று மம்தாவை சாடியுள்ளார்.

ஆர்.ஜி.கர் மருத்துவமனை ‘அபயா’ வழக்கில் கொலை மற்றும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களை மம்தா பானர்ஜி தீவிரமாகப் பாதுகாத்தார். இப்படிப்பட்டவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது சிறுமியின் குடும்பத்தினரைச் சந்திக்க பருய்பூர் (Baruipur) செல்லவிடாமல் தடுக்கப்படுவதாக பாஜக அரசு மீது குற்றம்சாட்டி பேச அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. இன்னும் சொல்ல போனால் பெண்களுக்கு எதிரான வன்முறையை மறைமுகமாக அங்கீகரித்தவர் அவர்; அவரது ஆட்சிக்காலத்தில் இத்தகைய குற்றங்களில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முதலிடத்தில் இருந்தது என்று சரமாரியாக மம்தா பானர்ஜி மீது குற்றம்சாட்டி இருக்கிறார் ராகுல் சின்ஹா .

குற்றவாளிகள் தப்பிச் செல்லப் போதுமான அவகாசம் அளிக்கும் வகையிலான மெத்தனப் போக்கையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் பாரபட்சமான அணுகுமுறையையும் மம்தா பானர்ஜி கடைப்பிடித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், சிபிஎம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை வெளிச்சத்திற்குக் கொண்டுவராமல் இருக்க மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகள் தொடர்ந்து முயன்றன. மேற்கு வங்கம் உருவானதில் சியாமா பிரசாத் முகர்ஜி முக்கிய பங்காற்றினார் என்ற உண்மையை மறைப்பதற்காகவே, மம்தா பானர்ஜி அந்த நாளை ‘கேலா ஹோபே திவாஸ்’ நாளாக அறிவித்தார். ஆனால் தற்போது அரங்கேறியுள்ள விளையாட்டைப் பாருங்கள்; அந்த மம்தா பானர்ஜியே ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

 

Tags : Mamta ,BJP ,KOLKATA ,WEST BENGAL ,INDIA ,RAHUL SINHA ,
× RELATED இலங்கை சிறையில் 2-வது நாளாக பயங்கர கலவரம்..! 25 பேர் பலி…