×

இலங்கை சிறையில் 2-வது நாளாக பயங்கர கலவரம்..! 25 பேர் பலி… 

கொழும்பு: இலங்கையின் நீர்கொழும்பு (Negombo) சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட கடும் கலவரம் மற்றும் வன்முறையில் 5 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த மோதலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.

முன்னதாக நேற்று நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படும் வரை, தற்காலிகமாக காவலில் வைக்கப்பட்ட விசாரணைக் கைதிகளுக்கும், தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. நேற்று 2 கைதிகள் பலியான நிலையில், இன்று காலையில் சிறை அதிகாரிகள் மீது கைதிகள் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியதால் கலவரம் மீண்டும் தீவிரமடைந்தது.

இந்த சூழலில் குறிப்பிட்ட சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக இன்றும் கலவரம் வெடித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்றும் கலவரம் தொடர்வதை அடுத்து நீர்க்கொழும்பு சிறை முன் கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு நிலவுகிறது. மேலும் நிலைமையைச் சமாளிக்க சிறப்பு அதிரடிப்படையினரும் (STF) ராணுவத்தினரும் சிறை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்திற்கிடையே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 2,417 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அந்தச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களுக்கான காரணத்தை கண்டறிய சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sri Lanka ,Colombo ,Negombo ,
× RELATED முதலமைச்சர் மாநில இளைஞர் விருது...