×

சவுமியா அன்புமணி ஓய்வெடுக்க சென்ற விருந்தினர் மாளிகையில் `பவர் கட்’: காரில் தவிப்பு

 

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி விருந்தினர் மாளிகைக்கு சென்றபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி எம்எல்ஏ நேற்று பங்கேற்றார்.

இதன் ஒருபகுதியாக குருங்குடியில் கபடி போட்டியை துவக்கி வைத்த அவர், நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுக்க லால்பேட்டை பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு நேற்றிரவு சென்றார். அப்போது விருந்தினர் மாளிகையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் ஓய்வெடுக்க முடியாமல், சிறிதுநேரம் தனது காரிலேயே தவித்தார். பிறகு டார்ச் லைட் வெளிச்சத்தில் அங்குள்ள தனது அறைக்கு சென்றுவிட்டு உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதனிடையே அங்கு ஜெனரேட்டர் வசதி இருந்தும் மின்விநியோகம் கொடுக்கப்படாதது குறித்து பாமகவினர் கேள்வி எழுப்புவதோடு, இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளிடம் முறையிட அலைபேசியில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அழைப்பை ஏற்காதது குறித்தும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். எனவே இது இயல்பான மின்தடையல்ல, திட்டமிடப்பட்ட மின்சார துண்டிப்பு என்ற பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து உயர் அதிகாரிகளிடம் பாமகவினர் முறையிட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Soumya Anbumani ,Kattumannarkovil ,PMK MLA ,Soumya Anbumani MLA ,Kattumannarkovil, Cuddalore district ,
× RELATED அமைச்சர் ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு